உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 அப்பாத்துரையம் - 11

மொழியாராய்ச்சி, இன ஆராய்ச்சி, பழம்பொருளாராய்ச்சி ஆகியவையே இவற்றின் மெய்மை பொய்மைகளை விளக்கவும், அவற்றிடையே வரலாற்று ஒளி காணவும் நமக்குப் பயன்பட்டு வருகின்றன.


குகைமனிதர்

உயிரினங்கள் ஓரணு உயிர்முதல் பலபடி உறுப்பமைதியுடைய உயிரினங்கள் ஊடாக முழுநிறைப்பேருயிரான மனிதன்வரை வளர்ச்சியடைந்தன என்று மண்ணூல், உயிர்நூல் ஆகியவற்றால் அறிகிறோம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ்நூலாகிய தொல்காப்பியம் இதை இன்னொரு வகையாகக் குறிப்பிடுகிறது. 'ஓரறிவுயிராகிய செடி கொடி இனமுதல் ஆறறிவுயிராகிய மனிதன் வரை இவ்வளர்ச்சி விரிவுற்றது' என்பது தொல்காப்பியர் கோட்பாடு.

மனிதன் தொடக்கத்தில், நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன், விலங்குகளுடன் விலங்காய் வாழ்ந்துவந்தான். அவனுக்கு நாடு, நகர், வீடு கிடையாது. அவன் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் வாழ்ந்தான். அவனுக்கு ஆடையணி கிடையாது. வெயில் மழைகளிலிருந்தும், குளிர் வெப்பங்களிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அவன் இலைதழைகளையே பயன்படுத்தினான். பயிர்த்தொழிலோ, சமையல் தொழிலோ அந்நாளில் இல்லை.

அவன் தீயைக் கண்டு பயன்படுத்தக் கற்றிருக்கவில்லை. இத்தகைய நாகரிகப் படியை வரலாற்றாசிரியர் குகை மனிதர் காலம் என்பர்.

மனிதனின் மிகச்சிறந்த அறிவுக்கருவியான மொழி. இக்காலத்தில் உருவாகவில்லை. அது சைகையாகவும் கூச்சலாகவுமே இருந்தது. தற்கால மொழிகளில் இச்கூச்சல்களே வியப்பிடைச் சொற்களாக இருக்கின்றன.

இத்தொடக்க காலத்திலிருந்து மனிதன் ஒவ்வொன்றாக நாகரிக சாதனங்களைக் கண்டுபிடித்து முன்னேறினான். அவன் கையாண்ட கருவிகளின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்றாசிரியர் இவ்வளர்ச்சியைப் பல காலங்களாக