28 அப்பாத்துரையம் 11
நாகரிகங்களுடன் தொடர்புடையதென்றும், அந்நகர்களின் சில அடுக்குகள் அவற்றுடன் சமகால வாழ்வுடையன என்றும் அறியப்பட்டது. அடுக்குகள் சமகால எல்லை கடந்து இன்னும் கீழே செல்கின்றன. ஆகவே, இவ்வகழ்வு ஆராய்ச்சி மூலம் இந்நாகரிகம் எகிப்திய சுமேரிய நாகரிகங்களைவிடப் பழமையானதென்றும், அவற்றைக் காட்டிலும் பலவகை முன்னேற்றங்களை உடையதென்றும் நாம் அறிகிறோம். அகழ்ந்தபகுதி பத்தில் ஒரு பங்கேயானாலும், அந்த அளவிலேயே அது கி.மு.3250-க்கு முன்னிலிருந்து கி.மு. 2500வரை நிலவியிருக்க வேண்டுமென்றும், கி.மு.2500-க்குப் பின் எக்காரணத்தாலோ திடுமென அழிவெய்தி இருக்க வேண்டுமென்றும் அறிய முடிகிறது.
சிந்து வெளியின் நகரமைப்பும், மக்கள் வாழ்க்கைத் திட்டமும் கலைச்சிறப்பும் தற்கால அறிஞர்களைத் திகைப்படையச் செய்கின்றன. கருவி வகையில் அது புதுக்கற்காலங் கடந்து உலோககாலத்தில் புகுந்த நாகரிகமாயிருந்தாலும், பண்பாட்டுவகையிலும் மற்றெல்லாத்துறைகளிலும் கிட்டத்தட்ட முழுநிறை முதிர்ச்சி அடைந்திருந்தது. அது முற்கால நாகரிகங்களைத் தாண்டி, மேற்சென்றிருந்தது மட்டுமல்ல; இக்கால நாகரிகங்களுக்குக்கூடப் பல வகைகளில் வழிகாட்டுவதாய் இருக்கிறது. பண்டை நாகரிகங்கள் பலவற்றிலும்-இக்கால நாகரிகங்கள் பெரும் பாலானவற்றிலும் கூட - மனித இனத்தின் பொருளும், நேரமும், அறிவும் பேரளவில் கடவுளர்க்குக் கோயில் கட்டுவதிலும், மன்னர் இளங்கோக்களுக்கு மாளிகைகள் கட்டுவதிலுமே செலவழிக்கப்பட்டிருப்பது காண்கிறோம். ஆனால், சிந்து வெளியின் நிலை இதற்கு நேர்மாறானது. அதன் மிகச்சிறந்த கட்டடங்கள் நகரப் பொது மக்களுக்கு உரியவையும், தொழிலாளருக்குரியவையுமேயாகும். வடிநீர் வசதி, சாக்கடை வசதி ஆகிய உடல் நல வாய்ப்புடைய தெருக்கள், காற்றோட்டமும் உடல் நல வாய்ப்பும் மிக்க வீடுகள், வீடுதோறும் கிணறுகள், மலம் கழி விடுதிகள், குளிப்பறைகள், நகரங்களில் இடத்துக்கிடம் பூம்பொழில்கள் முதலிய சிறப்புக்கள் சென்னை போன்ற இக்கால நகர்களுக்கும் முன்மாதிரிகளாய் அமைகின்றன. சென்னையில் சில ஆண்டுகளுக்குமுன் வீட்டுக்குவீடு பொருத்தப்பட்ட குப்பைத் தொட்டிமுறை மொகஞ்சதரோவில் 5000 ஆண்டுகட்கு முன்பே நீடித்து நடைபெற்ற ஒன்றாகும். அந்நகர்களின் உடல்நல வாய்ப்புத் திட்டங்கள் இன்று அவற்றை