உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 அப்பாத்துரையம் - 11

நாகரிகமாகவுமே இருக்கக்காண்கிறோம். சிந்துவெளி மக்கள் அன்று உள்நாட்டில் தமிழகத்துடனும், கங்கை வெளியுடனும், வெளியுலகில் பாரசிகம், மெசெபொட்டேமியா, எகிப்து முதலிய நாடுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

அக்கேடிய நாட்டில் சிந்துவெளி மக்களின் ஒரு வணிகக் குடியேற்றமே இருந்ததாகக் கூறப்படுகிறது. கைத்தொழிலாளரும் வணிகரும் சிந்துவெளியிலிருந்து சென்று தைக்ரிஸ், யூப்பிரட்டிஸ் ஆற்றோரங்களில் உள்ள வணிகக்களங்களில் தங்கள் சரக்குகளை நேரடியாக விற்பனை செய்தார்கள். இதுபோல சுமேரியக் கலை நுட்பங்களும், மெசெபொட்டேமியாவிலுள்ள நாள் ஒப்பனைப் பொருள்களும் முத்திரைகளும் சிந்துவெளியில் பின்பற்றப்பட்டன. இருதிசைகளுக்கும் இடையிலுள்ள வாணிகம் இன்பப் பொருள்கள், மூலப்பொருள்கள் ஆகியவற்றுடன் நிற்கவில்லை. சிந்து ஆற்றுவழியாகக் கடலிலிருந்து கொண்டுவந்த மீன்கள் நாள்தோறும் சிந்துவெளி மக்களின் உணவு மேடையில் வந்து காத்திருந்தன. ‘வரலாற்றில் நிகழ்ந்தவை' என்ற கவர்ச்சிகரமான பெயருடைய ஏட்டில்[1] கார்டன்சைல்டு என்ற ஆசிரியர் தரும் விவரங்கள் இவை.

சிந்துவெளி நாகரிகத்தின் வியத்தகு கூறுகளைத் தொகுத்து[2] நான் புதிதாகக் 'கண்ட இந்தியா' என்ற நூலில் இந்தியக் கூட்டுறவின் தொடக்க முதல்வரான பண்டித ஜவஹர்லால் நேரு கூறுவதாவது: சிந்துவெளி நாகரிகம் மிகவும் உயர் சிறப்புடையது. அந்நிலையை அது அடையப் பல்லாயிர ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும். என்பதில் ஐயமில்லை. இதில் மிகவும் வியப்புக்குரிய செய்தி ஒன்று உண்டு. அது யாதெனில், இந்நாகரிகம் முற்றிலும் சமயச்சார்பு அற்றதாக இருப்பதுதான். சிந்து வெளியில் சமய வாழ்வு இல்லை என்று இதனால் ஏற்படாது. ஆனால், அது மக்கள் வாழ்வில் ஒரு கூறாக இருந்தது. இன்றைய கீழ்நாட்டுச் சமய வாழ்வைப்போல அது அவ்வாழ்வையே விழுங்கி வளர்வதாயில்லை. அத்துடன் சமயத்துறையில் மட்டுமன்றி, எல்லாத் துறைகளிலுமே, அது இந்நாட்டு நாகரிகத்தின் மூலக் கருமுதல் ஆகும்.

சிந்துவெளி நாகரிகம் உலகுடன் நெருங்கிய தொடர்பும் ஒப்புமையும் உடையது. ஆனால், அது வெளி உலகிலிருந்து வந்த நாகரிகம் அன்று. ஏனெனில், அது வெளி உலகிலுள்ள மற்ற

  1. 6
  2. 7