உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 அப்பாத்துரையம் - 11

திரையன், இளந்திரையன் என்ற பெயரொற்றுமையைப் பார்க்க. பீலிவளை திரையர் குடிநங்கையே என்று எண்ண இடமுண்டு.

சங்கப் பாடல்களால் கோப்பெருஞ்சோழன், இராசசூயம் வேட்டபெரு நற்கிள்ளி, கோச்செங்கணான் ஆகிய சோழர்களைப் பற்றிப் பல செய்திகள் அறிகிறோம். ஆனால், இவர்களைக் காலவரிசைப்படுத்த முடியவில்லை. இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி அவ்வையார் காலத்தவன். கோச்செங்கணான் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களைக் கட்டியதாகத் திருமங்கையாழ்வார் குறிக்கிறார்.


பண்டைச் சேர மரபு

சங்க மரபின்படி முதல் சங்கத்துக்கும், புராணமரபின்படி பாரத காலத்துக்கும் உரிய மிகப் பழங்காலச் சேரன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், பாரதப் போரில் இருக்கிற வீரர்களுக்கும் பெருஞ்சோறு வழங்கியதாக முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற முதற்சங்கப் புலவர் (புறம் 2) அவனைப் பாடியுள்ளார். வேறு இருசங்கப் பாடல்கள் (அகம் 65, 233) இச்செய்தியைக் குறிப்பிடுகின்றன.

கிட்டத்தட்டச் சேரஅரசர்களின் ஒரு வரலாறாக இயங்குவது பதிற்றுப்பத்து. அதன் முதல் பத்தும் கடைசிப்பத்தும் நமக்குக் கிட்டவில்லை. ஆனால், இரண்டாம் பத்து, கடைச்சங்கத்தின் மிகப் பழைய அரசனாக உதியஞ்சேரலைக் குறிக்கிறது.

சேர அரசர் குடியுரிமை இக்காலக் கொச்சி அரசர் உரிமை போன்றது. குடியின் மூத்த ஆணே அரசனானான். எனவே ஒரே சமயம் வயதுவந்த அனைவரும் அரசுரிமை பெற்றனர். இக்காரணத்தால் சேர அரசரை மரபு வரிசைப்படுத்துவது கூட அரிதாகின்றது.

உதியஞ்சேரலையடுத்து அவன் மூத்த புதல்வன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், அவன் இளவல் பல்யானை செல்கெழுகுட்டுவனும் ஆண்டனர். அதன்பின் அவன் இளைய புதல்வர் இரண்டாம் ஆதன் அல்லது முடிச்சேரலாதனும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆண்டனர்.