இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
131
அடக்கம் செய்வதாக அவர் கூறினார். ஆனால், அவர் அடக்கம் செய்ய முடிந்தது பிரிட்டிஷார்மீதுள்ள பழைய பேரவைத் தலைவர்களின் நன்னம்பிக்கை ஒன்றையே. அவர் ஆட்சிக் காலம் பிரிட்டிஷ் பேரரரசின் வீழ்ச்சிக்கு முதல் எச்சரிக்கை மணியாக மட்டுமே உதவிற்று!
ஆண்டுதோறும் பேரவையில் தலைவர்கள் ஆற்றிய தலைமையுரைகள், பேரவையின் குறிக்கோளைப் படிப்படியாய் உயர்த்தின. அதன் பின்பு ஒவ்வொரு பேரவையிலும் ஆட்சி யாளருக்கும் மக்களுக்கும் பேரவை தன் விருப்பங்களைத் தெரிவித்துப் பல தீர்மானங்களை நிறைவேற்றிற்று. பல தீர்மானங்கள் முதல் பேரவையிலிருந்து தொடங்கிப் பல ஆண்டுகள் மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. ஆண்டு தோறும் அவை கவனிக்கப்படாமலிருந்தும், பேரவை உறுப்பினர் அதே தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் என்பது, அயல் ஆட்சியாளரின் பொறுப்பும் உணர்ச்சியும் அற்ற மரத் தன்மைக்கும், பேரவையின் தொடக்கக் காலப் பொறுமைக்கும் நல்லதொரு சான்று ஆகும்.
முதற் பேரவை: தீர்மானங்கள்
தொடக்கப் பருவத்தில் ஒவ்வோர் ஆண்டிலும் நிகழ்த்தப்பட்ட தலைமையுரைகளுக்கும், தீர்மானங்களுக்கும் முதல் பேரவையையே ஓரளவு முனைமுகமாகக் கொள்ளலாம். தலைமைப் பேருரையில் முதல் பேரவையின் தலைவர் உமேஷ் சந்திர பானர்ஜி வற்புறுத்திய நான்கு குறிக்கோள்களே அக்காலப் பேரவையின் குறிக்கோள்கள் என்னலாம். அவை பின்வருவன:
1. மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரும் மக்கட் பணியாளர்கள் மாநிலப் பேரவையில் ஒருங்கு கூடுவதனால், அவர்களிடையே நேச உணர்ச்சியும் ஒத்துணர்வும் பெருகும்.
2. இதன் மூலமே மாகாண வேறுபாடும் சமய சாதி வகுப்பு வேறுபாடும் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
3. சமுதாயக் குறைபாடுகளில் அறிஞர் கவனம் செலுத்தி, அது பற்றிக் கலந்தாராய்ந்து, வேண்டிய சீர்திருத்தங்களுக்குத் தீர்மானம் செய்யலாம்.