இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
167
பரந்த அளவில் மாநில அரசியலில் காந்தியடிகள் அறப்போராட்டத்தைத் தொடங்கியது 1919ல் நடைபெற்ற ரௌலத்துச் சட்ட எதிர்ப்பிலேயேயாகும்.
காந்தியடிகள் பேரவையின் அரசியலில் நுழைந்தபோது இந்தியாவின் முதல் தீவிரப் பேரவை இயக்க அலைகளாகிய வங்கப் புரட்சியும் வ.உ. சிதம்பரனாரின் தமிழகப் புரட்சியும் ஓய்ந்து விட்டன. கோபாலகிருஷ்ண கோகலே தலைமையில் ஆக்கத்துறை இயக்கமும் வலுப்பெற்றிருந்தது. ஆனால் 1915லிருந்து திலகர் அணி பெஸண்டு ஆகியவர்கள் தலைமையில் புதிய தீவிரக் கட்சி எழுந்து வளர்ந்து வந்தது. தொடக்கத்தில் பிரிட்டிஷார் நல்லெண்ணத்தில் காந்தியடிகளுக்கு நம்பிக்கை இருந்தது. அத்துடன் அவர் கோகலேயைத் தம் அரசியல் குருவாகக் கொண்டிருந்தார். ஆகவே, அவர் மிதவாதப் படை வீட்டிலேதான் இடம் பெறலாம் என்ற நிலை இருந்தது. ஆயினும், தன்னாப்பிரிக்காவில் அவர் மேற்கொண்ட அறப்போர் முறையை இந்திய அரசியலிலும் அவர் மேற்கொள்ள முனைந்தபோது மிதவாதிகளும் தீவிரவாதிகளுங்கூட முதலில் திகில் கொண்டார்கள். திருமிகு அன்னிபெஸண்டு அம்முறை கண்டு வெகுண்டார். ஆயினும், விரைவிலேயே தீவிரக் கட்சியில் அவர் ஆதரவு மிகுந்தது.1918க்குள் திலகருடன் அவர் சரிசமமான நிலை அடைந்து அதனை இயக்கத் தொடங்கினார்.
பேரவையினுள்ளே காந்தியடிகளின் புதிய தலைமைக்குப் படிப்படியான ஆதரவு பெருகி வந்தது. ஆனால், அவரது உண்மையான ஆற்றல் பேரவை மாநாட்டுக்கு வெளியே இருந்தது. எந்தப் பேரவைத் தலைவரும் இதுவரை பெறாத செல்வாக்கை அவர் விரைவில் மக்களிடையே பெற்று வந்தார். பேரவைக்கு வெளியே வளர்ந்து விட்ட அவர் மக்கள் தலைமையை 1919இல் பண்டித மோத்திலால் நேருவைத் தலைவராகக் கொண்ட பேரவை ஆர்வத்துடன் ஏற்றது. பாஞ்சாலத் தீவிரக்கட்சித் தலைவர் லாலா லஜபதிராய் முதலில் கருத்து வேற்றுமை தெரிவித்திருந்தார். ஆனால், பேராட்டம் திட்டமிடப்பட்ட பின் அவரே முன்னணியில் குதித்துத் தொண்டாற்றினார். 1920இல் போராட்டத் திட்டம் அமைத்த பேரவையின் தலைவர் அவரே.