உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

(147

(1505-1509) ஆட்சியும் மிகக் குறுகியதாகவே அமைந்தது. ஆனால் அது அவர்கள் ஆட்சியைப் போலவே போர் நிறைந்ததாகவும் தேசீயப் பண்பின் செறிவு மிக்கதாகவும் விளங்கிற்று. விசயநகரத்தின் மூன்றாம் கால் வழியாகிய துளுவ மரபின் முதல் ஆட்சியாக அமைந்த அதுவே தேசீயச் சிற்பிகள் ஆட்சிகளின் ஒரு பண்புப் பிழிவாகவும், மகுடமாகவும் திகழ்ந்தது. பேரரசின் புகழ் முகடாக விளங்கிய கிருட்டிண தேவராயன் ஆட்சிக்கு அது ஒரு முனிமுகம் என்னலாம்.

வீரநரசிம்மன் ஆட்சியைக் கையேற்றபோது, பெருமக்களில் பெரும்பாலோர் அவனுக்கு எதிராகவே இருந்தனர். முன் ஆட்சியிலேயே எளிதாக ரெய்ச்சூர் மண்டலத்தையும் இரெய்ச்சூர் முட்கல் கோட்டைகளையும் கைப்பற்றிக்கொண்ட யூசுப் ஆதில்கான் இத்தறுவாயைப் பயன்படுத்தி, விசயநகர எல்லை கடந்து மேலும் ஆற்றல் பரப்ப அவாக் கொண்டான். அதோனிக் கோட்டையாண்ட காசப்பன் அவனுக்கு உடந்தையாகக் கிளர்ந்தெழ ஒருப்பட்டிருந்தான். ஆயினும் இவ்வேளையிலும் வீர நரசிம்மனுக்கு ஆதரவாகப் பெருமக்களில் முக்கியமான ஒரு சிலர் இருந்தனர். இவர்களில் பின்னாளைய அரவீட்டு மரபின் முன்னோனான இராமராயனும் அவன் மைந்தன் திம்மனும் முக்கியமானவர்கள். வீர நரசிம்மன் ஆட்சிக்காலப் புயலில் அவர்கள் ஆதரவு அவனுக்குக் கைகண்ட உதவியாய் அமைந்தது.

அலி ஆதில்கான் திடுமென விசயநகர எல்லையில் பாய்ந்து கந்தனவோலுக் கோட்டையை முற்றுகையிட்டான். இச்சமயம் தற்செயலாக இராமராயனும் அவன் மகன் திம்மனும் இக்கோட்டையினுள் இருந்தனர். கோட்டைக்குள்ளேறிய அலி ஆதில்கானை அவர்கள் மும்முரமாக எதிர்த்து வெளியேற்றி முற்றுகையை முறியடித்தனர். அத்துடன் ஆதில்கான் படைகளோடு காசப்பன் சேர்ந்து கொள்வதைத் தடுக்க எண்ணி அவர்கள் ஆதில்கானைத் தொடர்ந்து சென்று வளைத்துக் கடும்போர் செய்து மீண்டும் முறியடித்துத் துரத்தினர். எதிரிகளுடன் தொடர்பு கொள்ள முடியாமல் காசப்பனும் தோல்வியேற்று அதோனிக் கோட்டையை விட்டோடினான்.