156
அப்பாத்துரையம் – 13
கோவாவைக் கைப்பற்றினர். இதன்பின் பேரரசன் கைமாற்று எதிர்பாராமல் பட்கலில் கோட்டை கட்ட இணக்கமளித்தான். அவர்களும் குதிரை வாணிக மட்டுமின்றித் தங்கள் முழு வாணிக உரிமையையும் படைத்துறைப் பயிற்சி உதவியையும் பேரரசுக்கு மனமுவந்து அளித்தனர்.
கங்கம் குலுங்கிற்று! கலிங்கம் கலங்கிற்று!
தீவானி, கோவில்கொண்டாப் போர்கள் கிருட்டிண தேவராயன் வடதிசைப் போர்களில் ஒரு கட்டம் மட்டுந்தான். ஆனால் ஆட்சித் தொடக்கத்திலே தெற்கே உம்மாத்தூர் தலைவன் கங்கராயன் பெனுகொண்டாவைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டு பேரரசையே எதிர்த்துக் கொக்கரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கெதிரான பாதுகாப்புக்களை மட்டும் செய்துவிட்டுப் பேரரசன் வடக்கே படை திருப்பியிருந்தான். வடதிசை வெற்றியில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவன் இப்போது தென்திசை திருப்பினான்.
விசயநகரத்தில் பேரரசனிடமிருந்தே நேரில் ஊதியம் பெற்றுப் பேரரசின் படைத்துறையரங்கமாக நிலவிய நிலைப் படைகள் “கைஜீதம்" என்றும், வடதிசைப் பண்ணை நில ஆட்சிமுறையில் விசயநகர காலத்தில் பெருமக்கள் மூலம் திரட்டப்பட்டபடைகள் “அமரம்” என்றும் அழைக்கப் பட்டன. உம்மாத்தூர் படையெடுப்பில் அமரம் படைகள் மட்டுமே ரண்டு இலட்சம் காலாட்கள், 24 ஆயிரம் குதிரைகள், 1200 யானைகள் கொண்டிருந்தன என்று போர்ச்சுக்கீசிய எழுத்தாளர் நூனிஸ் குறிப்பிடுகிறார்.
படையெடுப்பின் முதல் ஆண்டாகிய 1510-லேயே பெனு கொண்டா எதிரியிடமிருந்து பிடிபட்டது.கொண்டமராசனிடம் அதன் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் உம்மாத்தூரும் தலைநகரான சிவசமுத்திரமும் பிடிபட்டன. இப்போரில் கங்கராயன் கீழிருந்த சிக்கராயன் பேரரசனின் பக்கமாக இருந்து போர் செய்தான். சிவசமுத்திரத்தி லிருந்து ஓடிய கங்கராயன் காவிரியில் மூழ்கி இறந்தான். கிருட்டிணராயன் சிவசமுத்திரம் கோட்டையைத் தவிடுபொடி செய்து அதனை நரிகள் நடமாடும் புதர்க் கோட்டையாக்கினான்.