வெற்றித் திருநகர்
199
தென்னகம் முன்னோ பின்னோ காணாத இராமராயன் புகழ்ப் பண்பின் ஒருசிறு வண்ணப் புள்ளியாக இராமராயன் - அலி ஆதில்ஷா நட்பு அமைந்துள்ளது. இராமராயனின் புதல்வன் மாண்ட துயரால் அவன் உள்ளமும் இல்லமும் சில நாட்கள் இருண்டிருந்தன. இராமராயனைவிட அவனது மனைவி அதற்கு முற்றிலும் ஆட்பட்டு உயிர்த் துடிப்பிழந்து கிடந்தாள். திடுமென இயற்கை ஓர் உயிரொளியை உள்ளே அனுப்பிற்று. நாடிழந்த சமயம் தன்னை ஆதரித்த இராமராயன் துயர் கேட்டு ஆறுதலளிக்க வந்த பீசப்பூர் அரசன் அலி ஆதில்ஷாவின் உரு ஒளியே அது. இறந்த மகனின் வயதில், ஓரளவு அவன் சாயலில் தோன்றிய அவ்வுருவை அந்த ஆராத்துயர்க் கடலில் கரை காணாது தத்தளித்த இராமராயனின் மனைவி எதிர் கொண்டழைத்து 'மகனே, மகனே' என்று கண்ணீருகுத்தாள். அவளிடம் அந்நாள் முதல் புத்துயிர் தளிர்த்தது. இராமராயனும் அலி ஆதில்ஷாவை மனமாரத் தன் புதல்வனாக ஏற்றான்.
புயலில் மதப்பெயர் கூறி இராமராயனை எதிர்த்த கோழையர் கும்பலில் இதுபோல இராமராயனுக்கு நன்றிக் கடம்பூண்ட மற்றொருவனும் இருந்தான். அதுதான் அக்கும்பலின் சதிகாரத் தலைவன் இப்ராகீம் குதுப்ஷா! நன்றி காக்க அறியாத கோழை நன்மகனைத் தீவழியில் வீரமாகப் பிடித்திழுக்க முயன்ற புன்மகன் அவனே!!
சீரியர் கெட்டாலும் சீரியரே, சீரியர்மற்று
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும் - சீரிய
பொன்னின் குடமுடைந்தால் பொன்னாகும், என்னாகும் மண்ணின் குடமுடைந்தக் கால்.
அணிமைக் கால அருந்தமிழ் அவ்வையாரின் இப்பாடல் இராமராயன் வீழ்ச்சியை அவனை வீழ்த்தியவர் வீழ்ச்சியுடன் ஒப்பிட்டுக்காட்ட உதவும். இராமராயன் வெற்றிகள் பல கண்டவன்; தென்னகத்தின் பொன்முகடு அவன் வாழ்வு; அவன் வீழ்ச்சி தென்னகத்தின் பொன் முகட்டிகள் வீழ்ச்சி. அது தென்னகத்தைப் பொன்னாக்க உதவும் பொலம்புகழ். ஆனால் அவனை ஒன்றுபட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுபவர்கள் பின் என்றும் ஒன்று படாமல் வடக்கிருந்து விழுந்த கொலைக் கத்திக்குப் பள்ளாடுகள் போல ஒவ்வொருவராக வீழ்ந்தவர்கள்.