உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
82 ||

அப்பாத்துரையம் - 14



(சேய் அல்லது முருகன்) வழிபாடாகவும், அன்னையின் ஆண்கிளை அல்லது அண்ணன் (தாய்மாமனாகிய மாயோன்) வழிபாடாகவும், அன்னையின் காதல் துணை அல்லது ஆண்பாதி (அம்மையப்பன் அல்லது சிவபிரான்) வழிபாடாகவும் மூவகை அல்லது திணைவகையில் இருவகைப்பட்டது.

இம் மும்மை மரபின் தடங்களை நாம் தமிழக, இந்தியப் பரப்புகளில் மட்டுமன்றி நாகரிக உலக முழுவதிலும், நாகரிக உலக சமயங்கள் அனைத்திலும் காணலாம். நாகரிக உலகுக்குப் புறம்பான உலகின் வடகோடிப் பண்படா இனங்களிடையே (Maine: Ancient Law) அன்னை வழிபாடோ, பெண்ஆட்சி மரபோ, கோமரபு மலர்ச்சியோ தழைக்கவில்லை யாதலால், இயற்கை யாற்றல் வழிபாடுகளான பல தெய்வ வணக்கமன்றி ஓரிறை வணக்கம் மலரவில்லை என்று அறிஞர் கூறுகின்றனர். மாறாக, நாகரிக உலகிலே பெண்வழி மரபுடனும் வேள்புலக் குடியரசு மரபுடனும் மலர்ந்த கோமரபு மலர்ச்சியாகவே ஓரிறை வழிபாடு தோன்றி வளர்ந்தது. அத்துடன் மேலே சுட்டியபடி, குடியாட்சி மரபுக்கு மூலமாய் அமைந்த இந்த ஓரிறை வழிபாடு அம் மரபில் நின்றே இயல்பாகக் குடிமை இறைமை (Divine Family) என்ற நிலையில் தாய், தந்தை, சேய் (Mother, Father, Son) இணைவான மூவொருமை இறைமைக் கோட்பாடாயிற்று.

துவே பண்டைத் தமிழ் மரபில் சிவன், உமை, முருகன் (சோமாஸ்கந்தம்) என; புராணமரபில் சிவன், திருமால், நான்முகன் என; கிறித்தவ மரபில் தந்தை இறை, (God the Father), மகன் இறை (God the Son), தூய ஆவிஇறை (God the Holy Spirit) என; உமர் கய்யாமின் இசுலாமிய சூபி மரபில் அணங்கு (the Lady or God the Mother), ஏடு (வேதம் அல்லது குரான்), தேறல் கிண்ணம் (இறையருள் அல்லது பக்தி) என நாகரிக உலக சமயங்களில் படர்ந்து பரவியுள்ளது. சமய, சமுதாய, பண்பாட்டு ஒழுக்கத் துறைகள் சார்ந்த அறிவுத் துறைகளில் கூடத் தமிழரின் நாடு மொழி இறை ஆகிய சாவாமூவா மும்மைப்பண்பாகவும்; இயலிசை நாடகம் என முத்தமிழாகவும்; அறம்பொருள் இன்பமென முப்பாலாகவும்; பதிபசுபாசம் என, சத்துசித்து ஆனந்தம் என, திருக்கு திருசிய விவேகம் எனப் பலவாறான முப்பொருள் திறங்களாகவும் இதே மலர்ச்சி பல கிளை மரபுகளை வளர்த்துள்ளது என்று காணலாம்.