உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 145

வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறப்படுவதே சமுதாய உயர் மதிப்புச் சின்னம் என்று கருதப்படும் அணிமைக்கால மரபுகளே இவை. பொதுவாகச் சாதிமரபு வரலாறுகளும் சரி, அவற்றுக்கும் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகளுக்கும் ஆதாரமான சோழர் காலப்பட்டயங்கள் கல்வெட்டுகள், கொங்கு தேசத்து ராசாக்கன் போன்ற நாட்டு மரபு வரலாறுகள், அணிமைக்கால மக்கட்பாடல்கள் ஆகியவையும் (மரபு வரலாற்றாசிரியர்களின் சொல்லாராய்ச்சிகளும் கூட) கால வண்ணம் தோய்ந்து அதன் சாயம் பூசப்பட்ட அரைகுறை மெய்ம்மைகள் அல்லது மெய்ம்மைகளின் உருத்திரிபுகளேயாகும் என்பது மேலே சுட்டப்பட்டது. உண்மையில் அவை நமக்குக் காட்டும் பழங்கொங்கு நாட்டின் சித்திரம் சங்க இலக்கியப் பலகணி மூலமாகவும் வெளிநாட்டவர் குறியீடுகள் மூலமாகவும் பழமையாராய்ச்சிகளின் மூலமாகவும் கி.மு. 4000 ஆண்டுக்கு முன்னிருந்தே நமக்குத் தெரிய வரும் கொங்குத்தமிழகத்தின் பழமை வளச் சித்திரத்துக்கு முற்றிலும் மாறான முரண்பாடுகளை உடையது ஆகும். சங்க இலக்கிய ஆராய்ச்சி, அதன் துணை கொண்ட தமிழ்மொழி, தமிழ்ச் சொற்களின் தொல்மூல மரபாராய்ச்சி, உலக வரலாற்று ஒப்பீட்டாராய்ச்சி ஆகியவற்றின் ஒளி மூலமாகவே நாம் கால வண்ணம் படர்வித்துள்ள இத்தகைய திரிபு முரண்பாடுகளகற்றி வண்ணத் தோய்வற்ற முழுமெய்ம்மை வரலாறு காணமுடியும்.

கொங்கு நாட்டு வரலாற்றை வகுத்தவர்களில் பலர் சங்க காலத்தையே ஒதுக்கிவிட்டுப் பிற்காலச் சாயம் தோய்ந்த (புராணப் பண்பு வாய்ந்த) வரலாறே வழங்கினர். ஆயினும், சங்கப் புலவருள்ளும் புரவலருள்ளும் வேளிருள்ளும் யார் யார் கொங்கு நாட்டவர் என்று வரலாற்றாசிரியருள் சிலர் ஆய்ந்து காண முற்பட்டதுண்டு. பெருங்கவிஞர் புலவர் குழந்தையோ புலவர், புரவலர், வேளிர் ஆகியோரிடையே யார் யார் கொங்கு நாட்டவர் என்று ஆய்வதுடன் அமையாமல், யார் யார் கொங்கு வேளாள மரபினர் என்றே விளக்கமுனைந்தார். அத்துடன் இவ்வடிப்படையிலேயே அவர் சாதிமரபாராய்ச்சியாளர், ஆராய்ச்சியாளர் ஆகிய இரு சாரார் முடிவுகளையும் ஒதுக்கித்தள்ளி, கொங்கு வேளாளர் மரபினரும் கொங்கு