உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 157

மூலதளங்களாய் அமைந்தன. இம் மூலதளங்களி லிருந்து மறுமலர்ச்சிப் பாதை வடக்காகவோ, காவிரிக் கரையளாவி வடகிழக்காகவோ சென்று மீண்டும் கொங்கு நாட்டை இன்றைய நிலைக்கு வளப்படுத்தின.

முல்லைநில வாழ்வுக் காலத்தில் பொதுவாகத் தமிழகத்திலும் இந்தியாவிலும் வேளாளப் பேரினத்தின் மலர்ச்சியிலிருந்து ஆயர் அல்லது இடையர் (கோவேளாளர் அல்லது கோவைசியர்) தனி மாயோன் வழிபாட்டு மரபுடன் பிரிந்தது போலவே, குறிஞ்சி நிலத்தில் குறவரும் (முருக வழிபாட்டு மரபு), பாலைநிலத்தில் மறவரும் (கொற்றவை வழிபாட்டு மரபு), நெய்தல் நிலத்தில் மீனவரும் (வருணன்- பிற்கால மீனத் திருப்பிறப்புக்குரிய மாயோனாக மலர்ச்சி), மருதநிலத்தவரான மூன்றாம் ஊழிப்புது வகுப்பினரும் (சிவபெருமான் மரபிலிருந்து விலகி நின்ற இந்திரன் முதலிய வானவர் மரபு), பிரிந்தனர். (இந்தியாவெங்கும் ஒருவேளை நாகரிக உலகெங்கும்கூட பழங்குடியினர், மலங்குடியினர் இவ்வாறு பிரிந்து ஒதுங்கிய திணைமரபினரே யாதல் கூடும்). இந்த மரபுச் சிதறல் பெரிதும் முடியரசுக்கும் அதன் மூன்றாம் ஊழிக்கும் உரியதாதலால், நாகரிக உலகெங்கும், இந்திய தமிழகப் பரப்பெங்கும் நடைபெற்ற இச்சிதறல் கொங்கு நாட்டிலோ, பண்டைப் பெரும் கொங்கு நாட்டின் விரிநிழல் படிவாகிய (Projection shadow) நடுமேட்டு நிலப்பகுதியிலோ (விந்தியமலை சூழ்ந்த பகுதியிலோ) அதன் தெற்கிலுள்ள தெக்காணப் பகுதியிலோ நெடுநாள் நிகழவில்லை. இப்பரப்பு முழுமையிலும் வேளாண்மை மலர்ச்சி பெறாத குறிஞ்சி, முல்லை மரபின் வேளிரே, வேணாடரே வேளாண் மரபினராக, அதே சமயம் யாதவர், இராட்டிரகூடர், ரெட்டி போன்ற ஆட்சி மரபினராக நிலவியுள்ளனர் என்பது காண்கிறோம்.

உலகில், இந்தியாவில், தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத நிலையில் கொங்கு நாட்டின் கொங்குவேளாளர்-வேட்டுவர் மரபினரிடம் மட்டுமே நாம் காணும் குடியரசு மரபின் ஐந்திணை மலர்ச்சியும் ஒருங்கமைத்த நிலை இந்த வரலாற்று மரபில் வந்த விளைவேயாகும். ஆயினும், நாகரிக உலகில் ஆங்காங்கேயும் (மேலையுலக மூர்கள், சப்பானிய ஐனுக்கள் (Inus) போன்றவர்கள்)