உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 169

நூற்றாண்டு) முதல் சந்திர குப்தன் (கி.பி. 5ஆம் நூற்றாண்டு) ஆகியோர் காலம் வரை வட அரசர் தென்திசைப் படை யெடுப்பாகத் தொடர்ந்தது.மீண்டும் இதனிடையே இரண்டாம் திருப்பம் ஏற்பட்டுச் சேரன் செங்குட்டுவன் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) கால முதல் சோழப் பேரரசன் முதலாம் இராசேந்திரன் (கி.பி. 11ஆம் நூற்றாண்டு) காலம் வரை அது இந்தியாவுக்கு வெளியே அல்லது வட மேற்கேயுள்ள அயலரசருக் கெதிரான தென் திசை-வடதிசைத் தேசிய கூட்டணியாக உருமாறிற்று. (நடு ஆசியாவில் பாக்திரியா பார்த்தியா நாடுகளுடன் வடமேற்கிந்தியாவும் இணைத்து ஆண்ட கனகன் அல்லது குசாணப் பேரரசன் கனிஷ்கன், வடமேற்கிந்தியா மீது 18 முறை படையெடுத்துச் சூறையாடிய ஆப்கன் அரசன் கஜினி மாமூது ஆகியோரே இவ் அயல் மரபுக்குரிய அரசராவர்).

திருப்பங்கள் இரண்டுமே சங்க காலத்துக்குரியன. இரு திருப்பங் களுக்கும் முறையே சங்க காலப் பெருங்கொங்குத் தமிழகமும் தமிழ்ச் சேர நாடுமே நிலைக்களங்களாகவும் தூண்டுதல் காரணங்களாகவும் அமைந்திருந்தன.

புத்தர் பிரான் காலத்தில் (கி.மு. 5ஆம் நூற்றாண்டில்) தொடங்கி மோரிய மரபின் அசோகன் காலம் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) வரை நீடித்த இரண்டாம் மரபுக்குரிய முதல் திருப்பமே தமிழக மக்களின் - சிறப்பாகக் கொங்குத் தமிழக மக்களின் உள்ளங்களில் பரபரப்பையும் பல்வகை அதிர்வலை களையும் எழுப்பியிருந்தன. பத்திரிகை வாசிப்பவர்கள் இன்று தம் மனைவி மக்களிடம் உரையாடும்போது இடைப்பெய்து கூறும் உணர்ச்சிமயமான உலகச் செய்தித்துணுக்குகளைப்போல, சங்கப் புலவர்கள் இந்த அதிர்வலைகளைத் தம் அகப்புறப் பாடல்களில் பதிவு செய்து சென்றுள்ளனர். இம் முறையிலேயே படுமரத்து மோசி கீரனார், மாமூலனார் ஆகிய புலவர்கள், கங்கையாறு, அதன் கிளையான சோனையாறு, கிரேக்க வெற்றி வீர மன்னன் அலெக்சாண்டர் (கி.மு. 4ஆம் நூற்றாண்டு) படையெடுப்பின் அதிர்வு காரணமாக அப்பகுதிகளில் ஆண்ட நந்த மரபினர் கங்கைப்படுகையுள் புதைத்து வைத்திருந்த செல்வக்குவை ஆகியவற்றைப் பற்றிப் பாடியுள்ளனர்.