உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
224 ||

அப்பாத்துரையம் - 14



||-


மாறாமல் நின்று நிலைத்து வந்தாலும், புறத்தே அது மற்ற மண்டலங்கள்கூடக் காணாத புறவள அழிவைக் காண வேண்டி வந்தது என்பதில் ஐயமில்லை. ஐந்திணை மலராகப் பூத்த சங்க காலக் குடியரசுப் பண்பு சங்க காலத்துக்குப்பின் நெடுநாள் பாலையாகிவிட்ட கொங்கு நாட்டு வரலாற்றில் சோழர் கால முதல் பாலை வெப்பிடையே நறுஞ்சோலை மலராகவே மீண்டும் புது மலர்ச்சியுறத் தொடங்கியுள்ளது, மலர்ச்சியுற்று வருகிறது. அதன் இடைக்கால வீழ்ச்சி களப்பிரர் எழுச்சி, அதன் முன்னணி மரபினரான கங்க மரபினரின் ஆட்சி ஆகியவற்றால் மட்டுமன்றி, முடியரசர் குருதிப் போராட்டங்களாலும் நேர்ந்தது ஆகும்.

3) கொங்கு வாழ்வும் சங்கம் கண்ட தேசிய வாழ்வும் தேசங் கடந்த பெருந் தேசிய அமைப்பும்

சங்க இலக்கியமும் சங்க கால இலக்கியமும் இன்று தமிழரின் பழம் பெருமை பேசுவதற்குரிய அருங்கலைக் கருவூலமாக மட்டுமே கருதப்பட்டு வருகின்றன. உலகளாவிய, இந்தியா அளாவிய ஒப்பீட்டாய்வின் துணைகொண்டு சங்க இலக்கியப் பலகணி மூலம் நாம் அறியத் தகும் தமிழக, இந்தியத் தேசிய வாழ்வு வளம், உலக நாகரிக வளம் ஆகியவை பற்றியோ, கொங்கு வரலாற்றுடன் அவற்றிற்குரிய தொடர்பு பற்றியோ அறிஞர் உலகும் புலவர் உலகும் இன்னும் கருத்துச் செலுத்தவில்லை. முடியரசின் மூன்றாம் ஊழிக்குரிய கால வண்ணத்தின் சாயல் தமிழகத்தின் உள்ளும் புறமும் இந்தியாவின் உள்ளும் புறமும் இன்னும் இவற்றை நிழலடிப்பவையாகவே உள்ளன. எல்லா உலக மொழிகளிலும் (ஆங்கிலம்: Ceorl அல்லது Churl, உழுபவன், அற்பப் பயல்; Eorl அல்லது Earl, உழாதவன், கோமான், பெருமகன்) சமக்கிருதத்திலும் (விச், வேதகால மக்கள், கடை வருணத்தவரான மூன்றாம் வருணத்தவர்) தமிழிலும் (தேவராட்டி, வழிபாட்டாளர், விலைமகள், பொதுமகள்; குடிமகன்: நாட்டு மக்களில் ஒருவர், வேசி மகன் அல்லது அம்பட்டன்; வேளாளன் என்பதன் புது வடிவம் வெள்ளாளன், கடைநிலத்தவன், பெண்பால் வடிவங்கள்: வெள்ளாட்டியர், கடைசியர்-கீழ் மகள் வகுப்பு) இதே கால வண்ணத்தின் மரபு மலர்ச்சி இழிவுகளைக் காட்டும் சொற்களில் ஒரு சில ஆகும்.