உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
68 ||

அப்பாத்துரையம் - 14



ஒரு மக்களாட்சியின் மரபுப் பரப்பாகவே அமைந்திருந்தது. அத்தொடர்பில் இயல்பான குடும்பத்தின் தலைவரான தாய் அல்லது தந்தை ஆகியோரின் தலைமைக்குரிய மலர்ச்சியாகவே சமுதாய, அரசியல், சமயத் தளங்களில் முறையே ஆசான்,அரசன், ஞானகுரு அல்லது கடவுள் என்ற முறையில் (தாய், தந்தை, ஆசான்,அரசன்,கடவுள் ஆகிய) ஐங்குரவர் அல்லது ஐங்குரிசிலர் (குரு-விதை, இனவிதை) மரபு வளர்ந்தது. இந்த ஐங்குரவரின் மொத்த உருவாக, பேராளராக, குடும்ப விரிவான நாட்டின் மூத்த குடிமகனாக விளங்கிய கோ அதாவது அதாவது குலமுதல்வன் (குலமுதல்வி) அல்லது குலத்தலைவன் (குலத் தலைவி) அல்லது ஆட்சித் தலைவராக (ஆங்கிலம்: Prince-இளவரசன்: இலத்தீனப் பொருளில், முதல் குடிமகன்; Duke-குடியரசுத் தலைவன், கோமகன், இளவரசன்) அமைந்தான். இக் கோவரசுக் குழுவே நாளடைவில் விரிவுற்று ஊர், பேரூர் அல்லது நகர் (கோநகர் அல்லது தலைநகர்), அப்பேரூர் சேர்ந்து வளர்ந்த சிற்றூர்க்குழு என மலர்ச்சியடைந்து, பண்டைக் கிரேக்க, உரோம, பினீசிய மக்கள் வரலாறுகள் காட்டும் நகர்-நாடு அரசு (City-State) ஆயிற்று (அப்பழம் பெரு நாட்டினங்களின் பண்டை வரலாறு காண்க).

பண்டைக் கிரேக்க நாட்டு வரலாற்றாய்வாளர் ஒருவர் நகர்- நாடு அரசின் இலக்கணத்தையும், அதன் தோற்ற வளர்ச்சி வரலாற்று மரபையும் தமிழ்க் கவிஞர் பெருமாட்டி ஒருவரின் பாடல் மொழிபெயர்ப்பு மூலமே விளக்க முற்பட்டுள்ளார். கொங்கு நாட்டுக் கவியரசியாகிய ஒளவையார் பெயரால் நம்மிடையே நிலவும் ஒரு பாடலே அது. சங்ககாலத் தொண்டை நாட்டு வேளிருள் ஒருவனான தொண்டைமான் இளந்திரையன் ஆண்ட காஞ்சிமாநகரை அது வருணிக்கிறது.

‘வையகம் எல்லாம் கழனியா, வையகத்துள்

செய்யகமே நாற்றிசையின் தேயங்கள்; செய்யகத்தே வான்கரும்பே தொண்டை வளநாடு; வான்கரும்பின் சாறே அந்நாட்டின் தனியூர்கள்; சாறுஅட்ட

கட்டியே கச்சிப் பொருப்பெல்லாம்; கட்டியுள் தானேற்ற மான சருக்கரை மாமணியே ஆனேற்றான் கச்சி யகம்!"