இன்பத்துள் இன்பம்
155
நிலவொளி இன்பத்துக்கு உவமையாகப் பாடப்படுவது. ஆனால், அதைப் பாடும் கவிஞரே அதைப் பிரியாத் துணைவர்க்கு இன்பமாகவும், பிரிவுற்றவர்க்குத் துன்பமாகவும் வருணிக்கின்றனர். இன்பம் பெருக்கும் கருவியாய் அது யங்குவது போலவே, துன்பம் பெருக்கும் கருவியாகவும் அது இயங்குகின்றது. மேலும் பிரிவுற்றவராவது பிரிவு அகன்றபின் அதனால் இன்பமடைதல் கூடும். வாழ வகையற்று வறுமையில் உழைப்பவர்களுக்கு நிலவோ, நிலவின் கவிதையோ எத்தகைய இன்பமும் ஆறுதலும் தரமாட்டா. அவை அவர்கள் வாழ்வைக் கேலி செய்பவையாக மட்டுமே அமையவல்லன.
கிளர்ச்சிதரும் எழுவானின் எழில், விழுவானின் பண்ணிசைக்கும் வண்ண அழகு மலர்களின் மாயக்கவர்ச்சி- வை யாவும் காண்பவன் கண்ணொளிக்கும் உள்ளப் பண்புக்கும் வாழ்க்கைச் சூழலுக்கும் ஏற்ற அளவில்தான் இன்பம் தரமுடியும். அத்துடன் இன்பந் தரும் இப்பண்புகளைச் சூழலிலோ, புறஉலகிலோ தேடிக் காண்பதும் முடியாத காரியம். அவற்றை நுகரும் பண்பு செல்வத்தில் இல்லை-அவற்றை மறைத்தே செல்வர் மாடமாளிகை கட்டி வளைக்கப்பட்ட கோட்டை நகர்களுக்குள்ளே வாழ்கிறார்கள். அவற்றைக் காண, எண்ண நேரமில்லாமல் அவர்கள் வாழ்வில் பகலும் இரவும் வேறு முயற்சிகளால், கவலைகளால், அவாக்களால் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேசமயம் அப்பண்பு செல்வத்துக்கு அலந்த ஏழைகளிடமும் இல்லை. இரு நிலைக்கும் இடைப்பட்டகவிதை யுணர்வுடைய ஒருசிலர் தம் இன்ப நாட்டத்தின் ஏமாற்றங்களால் வரும் கவலைகளிடையே ஒரு சிறு ஆறுதலாகத்தான் அவற்றை அவ்வப்போது வரவேற்கின்றனர். அவர்களிலும் சிலராக, சில சமயம் தாம் நுகராது நுகர்பவர்க்கு உழைக்கும் தொழிலாளராக, மிகமிகச் சிலரே அவற்றைப் படைத்தளிக்கின்றனர்.
புறப்பொருள்கள் இன்பங்களோ, இன்பப் பொருள் களோகூட அல்ல; இன்பக் கருவிகளே. இவ்வுண்மையை மேற்காட்டிய சான்றுகள் தெளிவுபடுத்து கின்றன. இக்கருவிகளும் அவற்றைக் கைக்கொள்பவர்களுக்கு எப்போதும் இன்பம் தருவதில்லை. ஏனெனில், அவை இன்பத்துக்கு மட்டுமன்றித் துன்பத்துக்கும் கருவிகளாய் உள்ளன. இன்பம் நோக்கி