5. சங்ககாலப் போர்கள் - 1
தமிழர் தமக்கென வரலாறு வகுத்துக் கொள்ளவில்லை என்று குறைப்பட்டுக் கொள்கின்றனர் சிலர். தமிழருக்கு வரலாற் றுணர்வே கிடையாது என்று முடிவு செய்து விடுபவருமுண்டு. இந்த இரண்டும் இருவேறு வகையில் பிழைபட்ட கருத்துகளேயாகும். ஏனெனில் அறிவியல்போல, வரலாறும் எல்லா நாடுகளிலும் புதுப்படைப்பே. உலகெங்கும் வரலாற்றுக்கான ஆதாரங்கள் தேடி ஆராயப்பெற்று, நாட்டு வரலாறு தொகுக்கப்பட்டு வருவது சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளிலேயே என்னலாம்.
வரலாற்று ஆதாரங்களைப் பேணுவதிலும் தேடுவதிலும் நாடுகளைத் தூண்டியது தேசிய உணர்வே. தமிழகமும் சீனமும் நீங்கலான உலக நாடுகளில் இத்தேசிய உணர்வு காரணமாக நாட்டெல்லை வகுக்கப்பட்டதும், தேசிய அரசியல்கள் அமைந்த தும் அண்மைக்காலத்தில்தான். இத்தேசிய உணர்வுடன்,பண்டை நாகரிகங்களின் தூண்டுதலால் ஏற்பட்ட கலை மறுமலர்ச்சியும், வரலாற்றை உருவாக்கும் முயற்சிக்கு எங்கும் மிகுந்த ஆக்கம் அளித்துள்ளது. தமிழகத்திலோ தேசிய உணர்வும் தேசிய நாட் டெல்லையும், தேசிய அரசியலும் இரண்டாயிரம் மூவாயிர ஆண்டுகட்கு முன்பே ஏற்பட்டுவிட்டன. கலைமலர்ச்சியிலோ, உலகுக்குத் தூண்டுதல் தந்த பண்டை நாகரிகங்களுக்கு முற்பட்டே அதற்கு நீடித்த வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. வரலாற்றுணர்வும் வரலாற்றொளியும் அதன் இலக்கிய வாழ்வு முழுதும் உள்ளூர நின்று ஒளி வீசுகின்றது.
ஆனால், காலக்கேடாக, மற்றெல்லா நாடுகளிலும் புதிய தேசியத்தால் வரலாறு காணப்பட்ட நாளிலேயே தமிழகம் தன் தேசிய எல்லை, தேசிய அரசியல், தேசிய உரிமை வாழ்வு, தேசிய உணர்வு ஆகியவற்றை இழந்துள்ளது. எனவே, தமிழகம் தனக்கென வரலாறு வகுத்துக் கொள்ளவில்லை என்பதைவிட, அத்தகைய வரலாறு வகுப்பதற்குரிய சூழ்நிலையை இழந்து அது