தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2
89
அரசனானாலும் அவனைக் காவலில் வைத்து அமைச்சனா யிருந்த அமீர்பாரீதே ஆட்சியுரிமை செலுத்தியிருந்தான்.கிருஷ்ண தேவராயன் தலைநகர் குல்பர்க்காவைத் தாக்கி அமீர்பார்தை முறியடித்தான். முறைப்படி அரசுரிமை யுடைய மாமூதை விடுவித்து அவனையே அரசனாக்கினான். முன்பு தமிழகத்தில் ஹொய்சள மன்னர் 'சோழ வம்சஸ்தாபனாசாரியார்' 'பாண்டிய வம்ச ஸ்தாபனாசாரியார்' என்ற பட்டங்கள் மேற்கொண்டது போலவே, இது முதல் கிருஷ்ண தேவராயனும் ‘யவன அரசு விடுவித்துக் காத்தவன்' என்ற சிறப்புப் பெயர் மேற்கொண்டான்.
கிருஷ்ணையாற்றுப் போர் II:
அல்லது இரேய்ச்சூர் போர் II: - 1520 - (மே 19)
பிஜப்பூர் அரசன் இஸ்மாயில் ஆதில்கான் வடக்கே பீடாரில் கிருட்டிண தேவராயன் ஈடுபட்டிருந்த சமயம் பார்த்து இரேய்ச் சூரைத் திரும்பவும் கைப்பற்றிக் கொண்டான். அதை மீட்கக்கிருட்டிண தேவராயன் ஆற்றிய இரண்டாம் கிருட்டிணை யாற்றுப் போர் அல்லது இரேய்ச்சூர்ப் போர் விசயநகரப் பேரரசின் புகழைத் தென்னகமெங்கும் பரப்பிய பெரும் போர் ஆகும். போர்ச்சுக்கீசியர் பேரரசுக்குக் காட்டிவந்த ஆதரவு இதன்பின் ஆர்வ ஆதரவாயிற்று. தென்னகத்தை ஆக்கவும் அழிக்கவும் வல்ல பேரரசு விசயநகரப் பேரரசே என்பதை அவர்கள் இதன் மூலமே கண்டனர். போர்ச்சுகீசியர் வாணிக மூலம் விசயநகரப் பேரரசு வளமும். பேரரசு வளமூலம் போர்ச்சுக்கீசியர் ஆட்சிவளமும் பெருகின. இதனாலேயே 'கோவா எழ விசயநகரின்மூன்றாம் மரபும் எழும்; மூன்றாம் மரபு தாழ கோவா தாழும்' என்ற வாசகம் போர்ச்சுகீசிய எழுத்தாளரால் வழங்கப்பட்டுள்ளது.
போர்ச்சுகீசிய ஆசிரியர் நூனிஸ் இப்போரை நேரடியாகக் கண்டு விரித்துரைத்துள்ளார்.
கிருட்டிண தேவராயன் இரேய்ச்சூரை முற்றுகையிட்ட போது, இஸ்மாயிலின் படைகள் அதைக் குலைக்க முன்வந்தன. பீஜப்பூர்ப் படைகள் கிருஷ்ணையாறு கடந்து ஐந்து கல் வந்த பின் விசயநகரப் படைகள் இரேய்ச்சூரிலிருந்து ஒன்பது கல்வந்து அவற்றைத்தடுத்தன. இவ்விடத்திலேயே போர் மூண்டது.