தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2
(177
வர்களுள் ஒருவன் கேடயத்தால் தன் உடலைக் காத்தவண்ணம் தேசிங்கைப் பிடிக்குமாறு அணுகினான். ஆனால், தேசிங்கு ஓங்கிய ஈட்டி ஈட்டி கேடயத்தையும் அதன் மறைவிலிருந்து தலைவனையும் ஒரே பாய்ச்சலில் ஊடுருவிப் பாய்ந்தது. இதன் பின் எவரும் அருகே நிற்க அஞ்சினர்.
யாசமன் இச்சமயம் 'கொல்லுங்கள், விடாதேயுங்கள்' என்று உத்தரவிட்டான்.
துப்பாக்கி வேட்டுக்கள் தாம் நாற்புறமிருந்தும் வந்தன. ஒரு குண்டேற்று, உலையாத வீரன் உடல், உயிர் அற்று உணர்விழந்து வீழ்ந்தது.
கோட்டை முகலாயப் படைகள் வசமாயிற்று. தேசிங்கின் தந்தை சரூப்சிங்கு ஈட்டி வைத்திருந்த செல்வ குவைகளில், களத்தில் வீழ்ந்த அவன் செல்வன் நீங்கலாக யாவும் சாதத் உல்லாகானால் கைப்பற்றப்பட்டன. ஆனால், சாதத் உல்லாகான் தன் படைத் தலைவன் தாவூத்கானின் மாள்வை எண்ணவில்லை தன் படைகளின் குலைவை எண்ணவில்லை - மனித உலகம் கண்டிராத தேசிங்கின் வீரப் போராட்டமே அவன் உள்ளத்தில் ஒளி வீசிற்று. தேசிங்கின் பணியாட்கள், வீரர் அனைவரும் முன்போலவே தத்தம் பதவிகளில் இருக்கும்படி உரிமையளித்தான். ஆனால், அவ் வீரனிடம் பணி செய்தவர்கள் பின்னும் பணிசெய்ய விரும்பவில்லை. அவன் வீழ்ந்த இடத்திலேயே ஒரு நகரம் அமைத்து அதில் வாழவே விரும்பினர் து அவர்களுக்கு உரிமையாய் அளிக்கப்பட்டது.
பெண்டிர் அனைவரும் பாதுகாப்புரிமையுடன் தத்தம் விருப் பப்படி செல்லவோ பணியேற்கவோ, இணக்கமளிக்கப் பட்டனர். தேசிங்கின் மனைவிக்கு வேண்டிய செல்வம், மாளிகை கியவை வாக்களிக்கப்பட்டன. ஆனால், கணவன் இறந்த இடத்தருகே உள்ள செட்டிகுளத்தின் கரையிலேயே அவனுடலுடன் எரி மூழ்குவதையே அவள் பிடிவாதமாக வேண்டினாள். அவள் விருப்பப்படி பலர் அழுத கண்ணீருடனும், வணங்கிய உள்ளத்துடனும் நின்று காண அவள் தன் கணவனுடலுடன் ஒன்றுபட்டு ஆவியானாள்.