பிறமொழி இலக்கிய விருந்து -2
149
மேலும் கீழுமாக அலைந்தான். நெடுநேரம் இப்படி மல்லாடி ஆற்றின் நடுப்பகுதி அடையுமுன் இருள் கவிந்துவிட்டது. ஆற்றின் கருமையும் இருளின் கருமையும் ஒருங்கே ஆட்சி செய்தன. அவற்றிடையே பனிக் கட்டிகளின் பளபளப்பும் மின்னல்களும் தான் அவ்வப்போது ஒளிகாட்டின. அம் மின்னொளியிடையே ஓலாவின் போக்கைக் கண்கொட்டாது கவனித்துக் கொண்டிருந் தாள், இம்பார். ஓலாவும் தன் போராட்டத்திடையே அவளைக் கண்டான். அவன் முயற்சிகள் இன்னும் ஊக்கம் பெற்றன.
நடு ஆற்றொழுக்கு ஒரே பனிப் பாறையின் சறுக்காயிருந்தது. அதில் படகு செல்ல முடியாது. ஆனால் அதன்மீது நடக்கவும் முடியாது. ஓலா படகை அதில் சறுக்க விட்டுக்கொண்டு பின்னால் ஓடினான். பனிப் பாறை முறிவுற்ற இடத்தில் அவன் படகில் ஏறிக்கொண்டான். சறுக்கிய இடங்களில் படகைப் பிடித்துக்கொண்டு எழுந்து சமாளித்தான். படகு கவிழ்ந்து நீரில் அமிழத்
தொடங்கியபோது,
பனிப்பாறையில் காலூன்றி நின்று படகை அதன்மீது இழுத்துச் சமநிலைக்குக் கொண்டுவந்தான்.
ஆறு முக்கால் பங்கு கடந்துவிட்டது. அடுத்த கால் பகுதியே இடர்நிறைந்த இடம். இதுவரை மனஉறுதியுடன் கடந்து வந்த ஓலாவின் உள்ளத்தைக்கூட இது அச்சுறுத்துவதாயிருந்தது. அது ஆறு வளைந்து திரும்புமிடமாயிருந்ததால், முழு ஆற்று வேகமும் கரைமீது தாக்கிற்று. சுழல்களும் சுழிகளும் மிகுதியாயிருந்தன.
இம்பார் இப்போது ஓலாவின் கண்முன்னால்தான் நின்றாள். பனிப்புயலில்லாதிருந்தால் ஒருகணத்தில் அவளை அடைய முடியும். இதை அவனும் அறிவான். ஆனால் இன்று அவன் கடப்பது உயிரை இழப்பதாகவே முடியக்கூடும் என்று அவள் கண்டுகொண்டிருந்தாள் என்பதை அவள் தோற்றம் காட்டிற்று. அவள் முகத்தில் கண்ட கவலைக் குறி அவனை முன்னிலும் பன்மடங்கு ஊக்கிற்று. ஆனால் நீரோட்டத்தை நேராகக் கடக்கத் துணியவில்லை. ஆற்றின் போக்குக்கு எதிராக அவன் படகைச் செலுத்திச் சென்று, தொலைவில் கடக்க எண்ணினான். அவன் செல்லும் திசையில் அவன் எதிரே கரையில் இம்பார் நடந்து உடன் சென்றாள்.