இந்த நூலைப் பற்றி
ரஷ்யச் சிறுகதை எழுத்தாளர் சிறுகதைகள் என்னும் நுண்மணியில் என்னென்ன இழைத்துக் காட்டமுடியும் என்பதை இந்த மூன்று சிறு கதைகளும் எடுத்துக் காட்டுகின்றன.
அறிஞர் பெர்னாட்ஷாவின் நாடகமொன்றில் ஒரு 'இப்ஸன் சிலை' கிட்டத்தட்ட ஒரு உறுப்பாகக் காட்டப் பட்டிருப்பது போல, இங்கே கைக்கடிகாரமும் கதை உறுப்பினர்களுள் ஒரு உறுப்பினர்போல உருவகப் படுத்திக் காட்டப்படும் நயம் பாராட்டி நாம் மகிழாதிருக்க முடியாது.
மாயக் கணவன் (Eternal Husband) பற்பல பண்போவியங்களின் உறைவிடம்; மிக்க விருவிருப்புடையது.
மெல்லியலாள் (A Gentle spirit) ஒரு பெண்ணின் சோக வாழ்க்கைச் சித்திரம்! ஷேக்ஸ்பியரின் கார்டீலியா போல அவள் உலகறியாது, உலகியல் கடந்த வான் முகட்டில் வெண்துகிலாகத் தவழ்ந்து, புயலாய் சித்தரிக்கப்படுகிறாள்.
கைக்கடிகாரம் (The Watch) துர்கெனிவின் கதைகளில் காணப்படும் பொதுப் பண்புகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு: காட்சி விளக்கம்! சிறுகதை எழுத்தாளர்கள் இன்றியமையாத தாகக் கருதும் காதல் கட்டம் இதில் வாழ்க்கைப் புயலினிடையே காணும் ஒரு பாதையாகவே வகுத்துக் காட்டப்பட்டிருக்கிறது; மதிக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த மூன்று சிறுகதை முத்துக்களைத் தொகுத்துத் தமிழர் உள்ளந்தோறும் களிப்பு ஒளி படர, ஐந்தாம் விருந்து மலர்ந்திருக்கிறது. உயர் தமிழர் சுவை பெறுவார், மகிழ்வார் என்று நம்புகிறோம்.