உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

(179)

தவிர கடன்காரர் ஓயாது தொல்லை தந்து வசைபாடினார். சிறு சிறு கடன்களைக் கூட அவன் மனதாரக் கொடுத்து விடத் துணிவதில்லை; இவ்வளவையும் அவன் ஒருநாளும் சட்டை பண்ணியதில்லை. அதற்காக வருந்தியதுமில்லை. ஆனால் இப்போது அவன் ஏனோ கலங்கினான்!

சில நாட்களுக்குப் பின் அவன் வாழ்க்கை மாறியது. தீமைகளை ஏற்றதுபோல் இப்போது அவன் தீமைகளைத் துணிந்து இயற்றினான். தீமை நிறைந்த வாழ்க்கையில் சிறிது வெற்றியும் பெற்றான். ஒரு வயதுசென்ற கணக்கனைக் காரணமில்லாமலே அவன் உதைத்து, அவமதித்தான். ஓர் ஏழை ஆசிரியர் மனைவி அவனை நண்பனாக நடத்தினாள்- அவள் இரகசியங்களை வெளியிட்டுப் பல பேர் முன்னிலையில் பழி தூற்றி, அவள் வாழ்க்கையைப் பாழாக்கி மகிழ்ந்தான். இளவரசனாகப் பிறந்த ஒரு இளைஞன் - தாய்க்கு ஒரே பிள்ளை- அந்த அப்பாவியுடன் வல் வழக்காடி, அவனைத் துப்பாக்கியால் தாக்கிக் கால் முடமாக்கினான். இவற்றிலெல்லாம் அவன் கழிவிரக்கம் கடுகளவும் கொள்ளவில்லை- அவன் இப்போது எதற்காகவோ மறுகினான்!

பகலெல்லாம் வேண்டுமென்றே அலைந்தான். ஆயினும் அவன் மனம் ஒருநிலைப்படவில்லை. இரவு துயில் அவன் கண்ணை மருவ மறுத்தது; வயிறு உணவை மறுத்தது; வாய் சுவையை மறுத்தது. உள்ளம் ஓயாது இறந்த காலத்தை நோக்கித் திரிந்தது. எதை எதை எல்லாமோ நினைத்தது. ஆனால் துயரந்தரும் நினைவு எது என்று அவனால் கூற முடியவில்லை.

அவன் கண்ட காட்சிகளில் ஒன்றே ஒன்று அவன் உள்ளத்தை ஓயாது வருத்திக்கொண்டிருந்தது. அவனை அறியாமல் அது அவனை மீண்டும் துயிலிலும் விழிப்பிலும் அலைக் கழித்துவந்தது, கறுப்பு நாடா அணிந்த ஒரு மனித உருவம்- அதைப் பதினைந்து நாட்களுக்கு முன்தான் முதன் முதலாக அவன் சந்தித்தான். ஆனால் அப்போதே அது எங்கோ இதற்கு முன் கண்ட- மிக மிக நெருங்கிப் பழகிய முகம் மாதிரி இருந்தது. கண்ணுக்கு அவ்வுருவம் மறைந்ததும் அவன் அதை மறந்துவிட்டதாகவே எண்ணினான். ஆனால் மனம் எப்படியோ மீண்டும் மீண்டும் அதைச் சுற்றிச் சுற்றி, விட்டு விட்டு, வட்டமிட்டு