பிறமொழி இலக்கிய விருந்து -2
(289
நச்சுத்தடைகள், அச்சங்கள், பொருமல்கள், தொல்லைகள், ஆற்றாமைகள் ஏற்படும். இவையனைத்தும் தலை நோக்கமற்ற தன்மையின் பயன்கள் மட்டுமல்ல. உள்ள உரமற்ற நோய்மைக்கும் அவை சின்னங்களாகும். தலை நோக்கத்தின் ஆட்சியே நோக்கங்களுக்கு ஒழுங்கு தந்து உள்ளத்துக்கு உரம் உண்டுபண்ணும்.
தலைமை நோக்கம் இல்லாதவன் வாழ்வு உண்மையில் நோக்கமில்லாதவன் வாழ்வையோ, திட்டமிட்ட தீய நோக்கங்கள் உடையவன் வாழ்வையோ விடச் சிறப்புடையதன்று. தீய நோக்கங்கள் தீநெறி என்னும் திசையில் சென்று விரைந்து அழிவடையுமானால், தலை நோக்கமற்றவன் வாழ்வும் நோக்கமற்றவன் வாழ்வும் நெறியற்று அல்லது நெறிபிறழ்ந்து அலைக்கழிவுற்று, நீண்ட நாளைக்குப்பின் தீயநெறியிற் சென்றவர் அடையும் நிலையையே தானும் அடையும். முன்னது தரும் தோல்வி, துன்பம், பொருளிழப்பு ஆகியவற்றுடன் அது மேலும் அலைக்கழிவைத் தந்துவிடும். திட்டமற்ற நல்ல நோக்கங்கள் தரும் இத்தீமையை உன்னியே "நரகத்திற்குச் செல்லும்வழி நன்னோக்கங்களினாலேயே பாவப்பட்டிருக்கிறது” என்ற பழமொழி எழுந்துள்ளது.
ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய ஒரு நேரிய நோக்கத்தைத் தெரிந்தெடுத்து அதைச் செயல் வெற்றியுடையதாக்க வாழ்நாள் முழுவதும் பாடுபட வேண்டும். அத்துடன் அவன் அந் நோக்கத்தையே தன் கருத்துக்கள் அனைத்திற்கும் நடுநாயகக் குறிக்கோளாக்க வேண்டும். இந்நோக்கம் ஆன்மிகத்துறை சார்ந்ததாயிருக்கலாம். அல்லது உலகியல் சார்ந்ததாயிருக்கலாம். இது நோக்கம் ஏற்படும் காலத்திலுள்ள அவன் இயல்பையும் பண்பையும் பொறுத்தது. ஆனால் நோக்கம் எத்துறை சார்ந்ததாயிருந்தாலும் அத்தனை கேடில்லை. அவன் அதனை நாடியே தன் கருத்தாற்றல்களை யெல்லாம் ஒருமுகப்படுத்தி, அதையே தன் கடமையாகக்கொண்டு, அதன் செயல் வெற்றியில் முனையவேண்டும். அதை நோக்கிச் செல்லும் நேர் பாட்டையிலிருந்து கிளைத்துச் செல்லும் வழிகள் எவ்வளவு கவர்ச்சியாய், மனத்துக்குகந்ததாய் இருந்தாலும், அவற்றில் தன் முயற்சிகளைச் சிதறடிக்கப்படாது.