20
அப்பாத்துரையம் - 24
அமரின் குடும்ப அமைதியும் உயர்வாழ்வும் சமர்காந்துக்கு மிகவும் பிடித்திருந்தன. சுகதா, இரேணுகா ஆகிய இருவர் மூலம் அவர் விரும்பிய படியெல்லாம் அமரை ஆட்டி வைக்க முடிந்தது. அத்துடன் அவர் கைச் செலவில்லாமலே அவன் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. இப்போது படைவீரர் நிகழ்ச்சியின் பின், அவன் புகழ் இன்னும் உயர்ந்தது. அது அவர் மதிப்பையும் தொழில் வளத்தையும் பெருக்கிற்று. ஆயினும் எதிர்பாராவகையில் இப்புகழே அவருக்கும் அமருக்கும் இடையே மீண்டும் சிறு தொல்லைகளை உண்டு பண்ணிற்று.
முதலில் அமர் காங்கிரஸ் கூட்டமொன்றில் தீவிரமாக ஆட்சியாளரை எதிர்த்தும், ஏழைகள் நிலையை விரித்தும் சாற்பொழிவாற்றினான். செல்வர்வீட்டுப் பிள்ளையே இதனைச் செய்தது கண்ட போலீஸ் அதிகாரி சமர்காந்திடம் இதுபற்றி முறையிட்டார். சமர்காந்தின் தூண்டுதலின்பேரில் சுகதா மீண்டும் கணவன் போக்கில் தலையிட்டாள்.
அமர்காந்துக்குத் தன் பேச்சில் நாட்டுப்பற்றுத் தவிர வேறு எதுவும் இருந்ததாகத் தோற்றவில்லை. ஆனால் சுகதா அதுபற்றியெல்லாம் வாதிட விரும்பவில்லை. “அரசாங்கத்தை எதிர்ப்பது தப்பு என்று நான் சொல்ல வரவில்லை. எதிர்ப்பவர் எதிர்க்கட்டும். உங்களுக்கு நான் ஒரு கால்கட்டு இருக்கிறேன். எனக்கும் இப்போது ஒரு கால்கட்டு வந்துவிட்டது. என்னை நினைக்காவிட்டாலும் என்."
அமர் அவளை மேலும் பேசவிடவில்லை. “உன் குழந்தை என் குழந்தைதானே, சுகதா. நீயும் எனக்குக் கால்கட்டல்ல; குழந்தையும் கால்கட்டல்ல. உனக்கும் குழந்தைக்கும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். என்ன செய்யவேண்டுமென்கிறாய்?”
நான்
பெண்கள் உரிமைபற்றி அமர் படித்திருந்தான். குழந்தை பெற்றால் அவர்களைத் தொல்லைக்காளாக்குவது ஆடவர் கொடுமை என்று புதிய எழுத்தாளர் கூறியிருந்தனர். ஆகவே இளமையிலேயே சுகதா பேறுக்காளானது தன் குற்றம் என்று அமர் எண்ணி வருந்தினான். அவன் மனம் அவ்வளவு எளிதில் திரும்பியது கண்டு சுகதா மகிழ்வுற்றாள். “நீங்கள் இந்தக் காங்கிரசுக்காரர் பக்கமே போக வேண்டாம்” என்றாள்.