உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

137

தோலைக் காயப்போட்டுவைத்தான். பசுவின் சொந்தக்காரன் காவலருக்குத் தெரிவிக்க,. அவர்கள் தோலை அடையாளங் கண்டு துப்பறிந்து அவனைத் தண்டித்தனர். திருடிய பொருளின் தடம் இருக்கக் கூடாது என்பதை அவன் உணர்ந்தான்.

ஒருநாள் கன்னக்கோலிட்டுக் கதவுத்தாழை நீக்கித் திருட எண்ணினான். வீட்டில் உள்ள கிழவி எழுந்து வந்தாள். கிழவி தானே என்று கையை உள்ளே விட்டான். அவள் அரிவாளால் வெட்டவே அவன் கை வெட்டுப்பட்டு இரத்தம் பெருக்கிக் கொண்டு வந்தான். திருட்டில் எதிரி பலவீனன் என்று துணிச்சலடையாதே என்பது இத்தடவை அவனுக்குக் கிடைத்த பாடம். அதோடு கையைக்குணப்படுத்த மருத்துவ நிலையம் சென்றதால் இத்திருட்டுக் கண்டுபிடிக்கப்பட்டது. இனித் திருடிக் காயமுற்றால் மருத்துவநிலையம் செல்லக்கூடாது என்று தெரிந்துகொண்டான்.

கோவிலில் யாருமிருக்க மாட்டார்கள். கல்சிலைதானே இருக்கும் என்று கோயிலில் புகுந்து திருடினான். கற்சிலைப் பக்கத்தில் பதுங்கியிருந்த குருக்கள் பிடித்துக் கொண்டார். கற்சிலைக்குச் சக்தியில்லாவிட்டாலும் அதனருகிலுள்ள குருக்களுக்குச் சக்தி உண்டு என்பது தெரியவந்தது.

திருட்டும் கொள்ளையும் அவ்வளவு சிறந்த தொழிலல்ல, வஞ்சகமும் சூதும் அதைவிட நல்ல தொழில்கள் என்று எண்ணி னான் மாலை. சாமியார் உருவத்துடன் ஒரு பாமர வேளாள னிடம் சென்று நான் சில பூசை முறைகள் செய்யமுடியுமானால் மண்ணாங்கட்டியைப் பொன் கட்டியாக்குவேன் என்று கூறினான். பூசைசெய்ய இரண்டு வாசலுள்ள ஒரு குகையைத் தேர்ந்துகொண்டு முன்பணமாக நூறுரூபாய் வாங்கிக் கொண்டான். குறிப்பிட்ட நாள்வரை வேளாளன் ஒரு வாயிலில் காத்திருந்தான். மாலை மறுவாயிலின் வழியாக ஓட எண்ணி யிருந்தான். ஆனால் வேளாளன் தன் ஆவலையடக்க முடியாமல் ஒரு சிலரிடம் இச்செய்தியைக் கூறவே, அது காவலருக்குத் தெரிந்து அவர்கள் குகைக்கு இருபுறமும் காவல் வைத்து விட்டனர். மாலை கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டான். தீயவன் தீமையைவிட அறிவிலியின் அறியாமை மிகுதி தீங்கு தரக்கூடும் என்பது இதனால் கிடைத்த புதுப் படிப்பினை.