பேரின்பச் சோலை
66
“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு.”
கோபமும் கடுகடுப்பும்
107
உன் பண்பு கேடுகளில் மிக மோசமான பண்பு கேடு கோபம், கடுகடுப்புத்தானா? அப்படியானால் பண்புடைமை நோக்கிய உன் பயணம் எளிது. ஏனென்றால் பண்பு கேடுகளில் மிகவும் கேடு பயக்கும் பண்பு கேடுகள் இவையானாலும், அக் காரணத்தாலேயே அவற்றை நீ அகற்ற எண்ணுதல் எளிது ஆகும். கோபத்துக்கு நீ இடந்தரும் ஒவ்வொரு தடவையும் நீ அதனால் துன்பப்படுதல் உறுதி. அதை உன் அறிவின் துணைகொண்டே நீ திருத்த முயலுதல் எளிது.
கடுகடுப்புக்கு நீ இடந்தரும் சமயங்களிலோ, கேடு இன்னும் வெளிப்படையானது. ஏனெனில் கோபம் நின்று நின்றே வரும். கடுகடுப்பு நிலையாய்த் தீங்கு தரும். கோபத்தைப் பிறர் வெறுப்பதைவிட, கடுகடுப்பை மிகுதியாக வெறுப்பர். உன் வாழ்வில் கோபம் தரும் தோல்வியை விடப் பாரிய இடை யூறுகளைக் கடுகடுப்பு விளைவிப்பதை நீ எளிதில் காண்பாய். ஆயினும் உன் நலம் கருதி மட்டுமே நீ கோபமும் கடுகடுப்பும் நீக்க நினைக்கும்போது, உன் செயல்தான் நன்று. உன் பண்பு பின்னும் தன்னலப்படி கடவாது. பொதுநலம் அவாவி அவற்றை விட்டால்தான் தீமைக்கு நலம், கடுமைக்கு இனிமை என்ற சால்புப்படி உனக்கு எளிதாகும், இயல்பாகும்.
கோபமும் கடுகடுப்பும் உனக்குப் புறத்தீமை விளைவிப்பன மட்டுமல்ல. அவை உன் அக அமைதியைக் குலைக்கும். உன் இடர்களைப் பெருக்கும். உன் உள்ளத்தின் அறிவுக் கண்களை மூடி உன்னைப் பண்புக் குருடனாக்கும். அதே சமயம் பிறர்க்கு, பல சமயம் உன் அன்புக்குரிய, உயிருக்கு உயிரான பேருக்கு அதனால் ஏற்படும் கேடுகள் அளவற்றன. கோப நேரத்தில் ஒருவேளை நீ சொல்லலாம். ‘அவன் என்னை முதலில் வைதான், அவமதித்தான், புண்படுத்தினான்' என்று! அவ்வாதங்கள் சரியாக, நேர்மையானவையாகவும் இருக்கலாம். ஆயினும் அது உன் நலனையே, ஆண்மையையே, தன்மதிப்பையே குறைத்து விடுவதை நீ எளிதில் காண்பாய்.