உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

127

வருவதே. உலகின் பெருஞ்செயல்களுக்குரிய ஆரவாரப் புகழ் எல்லாம் குருடர் பலர் கூடி வன்குருடர்க்குச் செய்யும் வெறும் பூசனையேயன்றி வேறன்று. உண்மைப் பூசனை உலகின் கண் காணாதது. அடுத்திருப்பவர்கூட உணராத மறைபூசனையே. ஏனெனில் இவ்வகப் பூசனை அக அழகு காணும் அக நோக்க முடையார்க்கன்றி எளிதன்று. ஆனால் உலகு காணாத காரணத்தால், உலகு அதை மதிப்பதில்லை என்று கூறிவிட முடியாது.ஏனெனில் அதன் பலன் கண்கண்டது.

புறநோக்குடையவர் அதன் வழி காணாது, திசை காணாது பயனைமட்டும் கண்டு மருட்சியுறுவர். தம் புறக்கண், ஊனக்கண் கடந்த அக்காட்சியைத் தெய்வீக அருங்காட்சி என்று கூறி அமைவர். சிறு தன்மறுப்புக்களின் ஆற்றல் அவை என்று எண்ணாது, கடவுட் செயல், இயற்கை மீறிய தற்செயல்பேறு என்று கூறி ஏமாறுவர்.

புறம்தோன்றாப் போர்க்கள வெற்றிகள்

பண்புநிலை, சால்புநிலை, அருள்நிலை அடைந்தவன் உலகில் பெறும் நல்லாற்றல் அளவிடற்கரியது. அது எல்லையற்ற நெடுந்தொலை செல்லவல்லது. மனிதர் அதனைக் காணாமலே, அதை உணராமலே, அதன் நற்செயலுக்கு ஆளாகின்றனர். பண்பாளர், சால்பாளர் அதற்காகச் சிறுசிறு போர்க்களங் களிலே, எவர்கண்களுக்கும் படாமலே, அரவமில்லாமலே எத்தனை போர்களாற்றியுள்ளனர் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அச்சிறு போர்க்களங்களின் வெற்றிகள் மனித இனமுழுதும் அளாவிய எத்தகுமாபெருஞ் செயல்களை ஆக்கி வருகின்றன, எவ்வளவு பேரெல்லையில் பண்பாட்சி செய்து வருகின்றன என்பதையும் அவர்கள் உணரமாட்டார்கள். ஆனால் அந்நிலையிலும், அப்போர்க்கள வீரர் நோக்கு தம் நோக்கல்ல, புதுநோக்கு; தமக்குத் தீங்கற்ற, யாருக்கும் தீங்கற்ற, தமக்கும் எல்லாருக்கும் நலஞ்செய்ய வல்ல நோக்கு என்பதை மட்டும் அவர்கள் உணர்ந்து கொள்கின்றனர். உணர்ந்து அவர்கள், தம்மையுமறியாமல் பண்பாளர், சான்றோர்களுடன் ஒத்துழைத்து, தம்மையறியாமலே பேரின்ப ஆலயம் எழுப்பும் பணியில் பங்கு கொண்டு வருகின்றனர்!