பேரின்பச் சோலை
211
தற்குள்ள உரிமை - உண்டு. அவன் விரும்பினால் மற்றொருவனை வெறுப்பதற்குள்ள உரிமை கூட அவனுக்கு உண்டு. அதை யார் பழித்தாலும் அவன் விடப்போவதில்லை. அச்செயலால் வரும் வேதனையையும் அமைதிக்கேட்டையும் கண்டு, அச்செயல் எவ்வளவு அறிவுக் குருடானது, மடமை வாய்ந்தது, தவறானது என்று அவன் உணர்ந்தால் மட்டுமே - வெறுப்பிற் பழகுவதால், தனக்கு ஏற்படும் தீங்கை அவன் அளவிட்டறிந்தால் மட்டுமே - அவ்வெறுப்பை அவன் கைவிட முனைவான்.
நன்மைக்கும் தீமைக்கும் என்ன வேறுபாடு?
உலகப் பெரியார் ஒருவரை அவர் சீடர்கள் ஒருகால் அணுகினர்.
‘நன்மைக்கும் தீமைக்கும் என்ன வேறுபாடு? இதை விளக்க வேண்டும்' என்று கேட்டனர்.
அறிவிற் சிறந்த அவ் ஆண்டகை, கை விரல்களைக் கீழ் நோக்கிக் குவித்து நீட்டிய வண்ணம் கையைக் காட்டினார். 'இப்போது என் விரல்கள் எந்தத் திசையைக் காட்டுகின்றன?' என்று கேட்டார்.
‘கீழ்நோக்குகின்றன' என்றனர் சீடர்.
பின் ஆண்டகை தம் விரல்களை மேல்நோக்கிக் குவித்து நீட்டிய வண்ணம் கையைக் காட்டினார். 'இப்போது விரல்கள் எந்தப் பக்கம் காட்டுகின்றன?' என்று கேட்டார்.
'மேல் நோக்குகின்றன' என்றனர் சீடர்.
‘தீமை, நன்மை ஆகியவற்றின் வேறுபாடு இதுவே' என்றார் ஆண்டகை.
இச்சிறு காட்சிச் சான்று மூலம் தீமையும் நன்மையும் திசையில்தான் எதிர் எதிரானது, பண்பில் ஒன்றே என்று ஆண்டகை விளக்கினார். தீமை தவறான திசையில் செல்லும் ஆற்றல், நன்மை நேரான திசையில் செல்லும் ஆற்றல். தன் நடத்தையின் திசையை - தன்னை நோக்கித் தன்னலத் தீமையி லிருந்து, பிறரை நோக்கிய பொதுநல நன்மைக்கு மாற்றினால், தீமை நன்மையாகிவிடும்.