உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

(227

வருங்கால வாழ்விலல்ல, வேறோர் கற்பனை உலகிலல்ல தற்பற்றறுத்த அன்றே, அவ்விடத்தே, அவை எய்தப் பெறுவன. பொதுநல அவாத் தோன்றிய அன்றே துய்க்கப் பெறுவன.

அவற்றைப் பெறுவதற்கு வேறு எத்தகைய பிறப்புத் தகுதியோ, சிறப்புத் தகுதியோ கிடையாது. தோட்டி முதல் தொண்டைமான்வரை, பெரும்புலவன் முதல் சிறுவர் சிறுமியர் வரை யாரும் அதற்கு விலக்கானவர்கள் அல்லர். அவ்வாயில் நுழையும் உரிமையற்றவர்களல்லர். தூய தன்னலமறுப்பு ஒன்றே அதன் தகுதி.

உச்ச உயர்நலத்தை நாடு, நாடிப் பெறு! பெற்றபின் அதைப் பயில், அதை உன்னுள் படிய வை! நீ அப்போது நுகரும் இன்பம் அடியற்ற ஆழமுடையது. எல்லையற்ற பரப்புடையது. வானளா வியது. எங்கும் நிறைந்தது. அதில் நீந்தித் திளைக்கும் அளவு, நீ உன் தற்பற்றார்ந்த அவாக்களை விட்ட அளவு, பிறர் பற்றிய உன் கருத்துக்களின் இசைவு ஆகியவை பிறருக்கு நீ செய்யும் ஆர்வத் தொண்டினளவாயிருக்கும். நீயாக வகுக்கும் இந்த எல்லையன்றி அதற்கு வேறு எல்லை கிடையாது.

தன்னலத்துறவு என்னும் வாயில் கடந்ததும் நீடின்ப அழகுக் கோயிலின் முகப்பு நேர்படும். வாயில் கடந்த எவரும் அதனுள் நேராக வேறு எவ்வகைத் தடையுமின்றிச் செல்லலாம். எங்கும் திரிந்து எல்லாவகை அழகு நலங்களும் துய்க்கலாம். ஐயங்கள், தயக்கங்கள், மயக்கங்கள் இதன்பின் அவர்கள் பாதையில் நிழலாட மாட்டா.

பொதுநலம் தரும் பொங்கல் வளம்

தன்னலம் ஒருவன் நலத்தை உண்மையில் வளர்ப்பதல்ல. தீங்கையே பெருக்குவது. பொதுநலமே அவனுக்குப் பொங்கல் வளம் உண்டுபண்ணுவது. ஆனால் பொதுநலவாணன் இந்த அறிவால், இந்த அடிப்படையில் செயலாற்றுவதில்லை. செய லாற்றினால் அது பொதுநல ஆர்வமாகாது. பொதுநலத்துக் குரிய உயர்தகுதியையும் அது பெறாது. அத்துடன் பொதுநலம் தன்னலத் தற்பற்றுடையவன் எதிர்பார்க்கும், கனவு காணும் தற்பற்றவாக்களின் நிறைவன்று.