அப்பாத்துரையம் - 29
(282) || இவை உள்ளத்தின் கோளாறுகளால் நிகழ்பவை. இவற்றையே வாழ்வாகக் கருதுவர் பலர். ஆனால் இவையே பேரின்ப ஒளியை மனிதரிடமிருந்து மறைக்கும் மடமைத் திரைகள்.
இத்திரைகளைக் கிழித்து உண்மை வாழ்வின் ஒளியைக் காட்டத் தொடங்குவது அவாவடக்கம். முழுநிறை அவா அடக்கம் திரை முழுவதுமே கிழித்து, உண்மை வாழ்வொளி காட்டிவிடும். உண்மை வாழ்வு - அதன் ஒழுங்கான எளிய அமைதி - அதன் பின்னரே தென்படும்.
வாழ்க்கை - உண்மை வாழ்க்கை - அன்பு என்னும் சுடர் விளக்கின் ஒளியேயாகும். அதன் கதிர்களே அமைதிகள், ஒழுங்குகள். ஒழுங்குகளே வாழ்க்கையின் எல்லைகள் ஆகின்றன - ஒழுங்குகளின் வலைப் பின்னல் தொகுதியே வாழ்க்கை. என னவே ஒழுங்கமைதிகளின்றி வாழ்க்கையில்லை. வாழ்க்கையின்றி ஒழுங் கமைதிகள் இல்லை. அவை வாழ்க்கையை நிறைவுபடுத்து கின்றன. வாழ்வின் எல்லாக் குறைகளையும் நிறைவேற்றும் ஆற்றல் அவற்றிலே உண்டு. அவை நிறைவேற்றாக் குறை எதுவு மில்லை.
அவாவுடையவர்கள் அமைதியை மீறிவிடும் இடம் இதுவே. ஏனெனில் அவாவாணனுக்கு ஒவ்வோர் அவாவும் ஒரு கற்பனை உருவான குறையே. தன்னல அவாக்கள் ஒழுங்கமைதி மீறியவை, அன்பொளியை மறைக்கும் அவாத்திரையின் இருள் நிழல்களே. ஆகவே அவை உருவாக்கிக் காட்டும் குறைகளும் உண்மைக் குறைகள் அல்ல. நீர்போல் தோன்றி ஏய்க்கும் கானல்நீர் போல, அவை குறைபோலத் தோன்றும் போலிக் குறைகளே. ஒழுங்கமைதிகளை மீறி அவை துன்பமும் இடுக்கணும் உண்டுபண்ணுவதன் காரணம் இதுவே.
தனி மனிதன் அவாக்கள் இனக் குறிக்கோளுக்கெதி ரானவை. ஆனால் இனக் குறிக்கோள் அல்லது இன அவாக்களே தனி அவாக்களுக்கு முற்பட்டவை. அதனாலேயே அவை இயல் பானவை. தனி அவாக்களுக்கு மேம்பட்ட ஆற்றலுடையவை. தனி அவாக்கள் அழிந்த அல்லது தளர்ந்த இடத்தில் அவை தாமாகச் செயலாற்றத் தொடங்கிவிடும்.