பேரின்பச் சோலை
295
ஆன்மிக உலகிலும் இதுபோலப் பண்டத்துக்குப் பண்ட மாகப் பருப்பொருள்களுக்குப் பதில் பருப்பொருள், பண்பு களுக்குப் பதில் பண்புகள் வழங்கப்படுகின்றன. பருப்பொருள் களுக்கு மாற்றுப் பருப்பொருளாவதுபோல, பண்புகளுக்கு மாற்றுப் பண்புகளாகவே அமைகின்றன. அவற்றின் இடை தொடர்பைக் குறிப்பதும் தகுதி என்ற நாணயம், ஆன்மிகப் பணம் ஆகும்.
நாணயம் என்ற தமிழ்ச்சொல் தகுதியையும் பணத்தையும் ஒருங்கே குறித்துக் காட்டுவதுடன், உண்மையான தகுதியின் தன்மையையும் விளக்குவதாக அமைந்துள்ளது காணலாம். ஏனெனில் அதே சொல் வாய்மை, பொறுப்பு, நம்பகம் என்ற பொருள்களும் தருகின்றது. ஆன்மிக நிலையில் ஆன்மிக உழைப்பின் தகுதி, தன்னலமறுப்பு, பொதுநல அவா, வாய்மை ஆகிய அரும்பண்புகளாலும், அஃதாவது அருமையாலும், அப்பண்புகளின் தன்மறுப்பளவாலுமே அளவிட்டு மதிக்கப் பெறுகின்றது என்பதை இது காட்டுகிறது.
உலகியல் பண்டமாற்றுக்கும்,ஆன்மிகப் பண்டமாற்றுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு ஒன்றே ஒன்று. உலகியல் பண்ட மாற்றில் தகுதி அல்லது நாணயம் சமூக அடிப்படை. தொடர்பு கொள்பவர் சமுதாயத்தில் உறுப்பினராகிய தனிமனிதர். ஒரு தனி மனிதர் இன்னொரு தனி மனிதருடன் சமுதாயப் பொதுத் தளத்தின் மீது கொள்ளும் தொடர்பாகவே வாணிகம் நிகழ் கிறது. ஆனால் ஆன்மிகப் பண்டமாற்றுச் சமுதாய அடிப்படை யுடைய தன்று. இன அடிப்படையானது.
சமுதாயத்தை ஒரே குடும்பமாகக் கொண்டதே இனம். அது எல்லையில் குடும்பம் கடந்தது, பண்பில் சமுதாயம் கடந்தது. சமுதாய எல்லையில் நிகழும் குடும்பப் பண்பே அது.
இந்த இன அடிப்படைத் தளத்தின்மீது ஆன்மிக வாணிகத் தில் கொடுப்பவர், கொள்பவர் வேறுவேறு சமுதாயம் அல்லது இனத்துக்குரிய உறுப்பினர் அல்லர். கொள்பவரும் கொடுப்ப வரும் ஒருவரே. ஒரே இன உறுப்பினரே. அதே சமயம் இனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இவ்வாணிகம் செய்தற்குரியவர் ஆவர். ஒவ்வொருவரும் தாமே கொடுப்பவராகவும் தாமே கொள்பவ ராகவும் உள்ளது இவ் விசித்திர வாணிகம்.