உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

41

நயம் மிகுந்த இந்தப் போர்க் கோலத்துடன் அவளிடம் புது நங்கையாகி, தன் மாமனிடம் சென்று பேசினாள். அவளிடம் அவர் கண்ட மாறுதல் அவர் முகத்தில் புன்முறுவல் தோற்றுவித்தது. ஆனால், அந்த மாறுதலின் போக்கு வழக்கமாக எவரும் எதிர்பாராததாயிருந்தது!

அவர் லாரைன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டார். அவரை அறியாமல் அவர் உள்ளம் அவள் கருத்துகளை எண்ணி நகை பூத்தது. லாரைனிடம் அவர் கேட்டார்-

"குழந்தாய்! நீ கூறுவதெல்லாம் சரிதான். ஆனால், அவர் வயதென்ன? உன்னைவிட அவர் ஒரு தலைமுறைக்கு முந்தியவ ராயிற்றே இதை நீ எண்ணிப் பார்க்கவேண்டாமா?"

லாரைன்: அதனால் என்ன கேடு மாமா? அவர் என்னை நேசிக்க முடியும், நேசிக்கிறார். என்னை அவர் பேண முடியும். எனக்கு அவர் மீது மதிப்பு உண்டு. வேறு என்ன வேண்டும்?

திரு காண்டர் இப்புதுக் கருத்தில் ஆர்வங்காட்ட முடிய வில்லையாயினும், படிப்படியாக அதனை ஏற்கத் தொடங்கினார். தாய் தந்தையர் உணர்ச்சியற்ற போக்கால் எத்தனை பேர் காதலில்லா மணத்திற் சிக்கி அலைக்கழிகின்றனர். அவற்றைப் பார்க்க, இது மோசமென்று கூறுவதற்கில்லை. இதில் ஏமாற்றம் இல்லை, ஏமாற்றுதலும் இல்லை; சூழ்நிலையை நோக்க, புறத்தேயுள்ள பொருந்தாமை அத்தனை பெரிதன்று என்று அவரும் அமைந்தார்.

“சரி, நான் அவரிடம் மெல்ல இதுபற்றித் தெரிவிக்கிறேன்” என்று அவர் ஏற்றுக்கொண்டார்.

சிட்னி சிரோம்மோன் அக்கருத்தை விளையாட்டாகக் கருதுவாரென்று திரு. காண்டர் எதிர்பார்த்தார். ஆனால், அவர் அவ்வாறு கருதவில்லை. அதுபற்றி ஆராய முனையவும் இல்லை. தம் தொலைக் கனவுகளையும் மீறிய இவ்வெதிர்பாராச் செய்தி அவரைத் துள்ளிக் குதிக்க வைத்தது. அது அவர் உள்ளத்தை முற்றிலும் மகிழ்ச்சியுளாழ்த்திற்று. அவர் தோற்றம் இதனால் பல ஆண்டு இளமை பெற்றது. அவரது வழக்கமான அமைதி பறந்தது - அவர் உள்ளக் கிளர்ச்சியால் துள்ளிக் குதித்தாடினார்.