உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
222 ||

அப்பாத்துரையம் - 33



அனைத்துலகும் கனவு கண்டும் உண்டு திளைக்காத செங்கரும்பு இது” என்று பலவாறு அதை உள்ளுக்குள்ளே புகழ்ந்து வியந்தபடி தன்னை மறந்தவனாய் அண்ணாந்து பார்த்துக் கொண்டு நின்றான், கீவ்!

‘வாழ்ந்தால் இதுபோன்ற வீட்டிலல்லவா மனிதன் வாழ வேண்டும்!’ என்று அவன் கலையுணர்வு, அவனை இடித்துக் கூறிற்று. இதன் ஒரு தூணைக் கட்டிமுடிக்க எவ்வளவு செலவாகும் என்பதை எண்ணிப் பார்த்தாயா? ஆயிரம் பொன்னைக் கையில் வைத்துக் கொண்டு ஆய்ந்தோய்ந்து பார்க்கவேண்டிய செய்தியில், அத்தனை வெள்ளிகூட இல்லாத நீ அரைக்கணத்தில் திட்டமிடுகிறாயே!’ என்று அடித்துப் பேசிற்று அவன் அனுபவ அறிவு.

ஆனாலும், ஆவல் யாரை விட்டது? அவன் தன் சட்டைப் பையில் கையைவிட்டு, அதிலுள்ள பணத்தை எண்ணிப் பார்த்தான். சரியாக ஐம்பது அமெரிக்க வெள்ளிகள்தான் இருந்தன. ஒரு காசு கூடவோ குறையவோ இல்லை. உலகம் சுற்றுவதற்காக அவன் கொண்டு வந்திருந்த இருநூறு வெள்ளிகளில் மீந்திருந்த தொகை அது. திரும்ப ஹவாய்க்குப் போகக்கூட அந்தத் தொகை முழுவதும் பற்றாது.

அவன் கனவுக் கடலின் எண்ண அலைகளில் மிதந்து தத்தளித்தான். அச்சமயம், “அன்பனே, ஏன் தயங்குகிறாய், அந்த ஐம்பது வெள்ளி கொடுத்தால் போதும். இந்த வீடு வேண்டுமானாலும் கிடைக்கும். இதுபோல் எத்தனை வீடுகள் வேண்டு மானாலும் கட்டிக் கொள்ளலாம்.” என்றது ஒரு குரல்.

அவன் அருகே வயது சென்ற, கூனிய ஒரு குள்ள உருவம் நின்றிருந்தது. அவன் தன் கண்களை நம்ப முடியவில்லை. “என்ன? என்ன? இந்த வீட்டையா? ஐம்பது வெள்ளிகளுக்கா? நீ கேலி செய்கிறாய்!” என்றான் அவன்.

குள்ள உருவத்தின் முகத்தில் கேலிக் குறிப்புக் கொஞ்சங்கூட இல்லை. “ஆம், இந்த வீட்டைத்தான். ஏன்? இந்த வீட்டைப்போல ஆயிரம் வீடுகளையோ ஆயிர மடங்கு மற்ற இன்பங்களையோகூட நீ பெறலாம். ஐம்பது வெள்ளியைக் கொடுத்து வாங்க விருப்பமிருந்தால் கூறு.” என்றது அக்குள்ள