உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
246 ||

அப்பாத்துரையம் - 33




ஒருநாள் கோக்குவா சற்றுக் கண்ணயர்ந்து உறங்கி எழுந்தபோது, அருகே, கீவைக் காணவில்லை. வீடெங்குந் தேடியும் பயனில்லை. தோட்டத்தின் பக்கமுள்ள பல கணியில் சென்று பார்த்தாள். அவள் உள்ளம் பதை பதைத்துப் பாகாய் உருகிற்று. கீவ் ஒரு மரத்தினடியில் மண்ணில் கிடந்து புரண்டு வாய்விட்டுப் புலம்பினான்.

முதலில் எழுந்த உணர்ச்சியில் கோக்குவா அவனிடம் சென்று தேறுதல்சொல்ல எண்ணினாள். ஆனால், அவள் பெண்மையறிவு விரைவில் எழுந்து அவளைத் தடுத்தது. மனைவிக்குத் தெரியாமல் வெளியே சென்று தன் துயரைக் கொட்டும் கணவன் உள்ளம். அத்துயரை அவள் அறிந்து விட்டாள் என்று காணப்பொறாது என்பதை, அவள் உணர்ந்தாள். ‘இப்போது வேண்டுவது தேற்றுதல் அல்ல, துன்பந் தவிர்த்தல், காதலுக்காகத் தன் எதிர்கால நலனைத் துறந்த ஒப்பற்ற காதலனுக்குத் தான் செய்வது அதே துறவன்றி வேறெதுவுமன்று’ என்று அவள் தனக்குள் துணிவு கொண்டாள்.

அவள் உள்ளம் முடிவான திட்டமிட்டது. அவள் ஒரு காசுக்குரிய சில்லறையாகிய ஐந்து சிறு காசுகளை எடுத்துக் கொண்டு பேசாமல் வெளியே புறப்பட்டாள். மாளிகையண்டையுள்ள தெருக்களில் சுற்றுமுற்றும் உலவினாள்.

காசநோயால் உடல் முழுவதும் அரிக்கப்பட்டு, ஓயாது இருமிக்கொண்டே உறக்கமில்லாது உழலும் ஒரு கிழவனை அவள் கண்டாள். அவனருகில்சென்று அவன் நோய்பற்றிக் கேள்விகள் கேட்டு ஆதரவாகப் பேசினாள். ஓர் இளம் பெண் இந்த வேளையில் தன்னிடம் வந்து இவ்வளவு கனிந்து பேசுவதுகண்ட கிழவன் வியப்படைந்தான். ஆனால், அவன் உள்ளத்தில் அதனால் மிகவும் ஆறுதல் ஏற்பட்டது. அவன் தன் இருமல்களிடையே அவளை நன்றியறிதலுடன் நோக்கி, “உனக்கு என்ன என்னால் செய்யமுடியும்.. மகளே! உன் மனத்தில் ஏதோ துன்பம் இருப்பதாக உன் முகம் காட்டுகிறதே!” என்றான்.

கோக்குவா அவனிடம் புட்டிபற்றிய கதையையும் அந்தத் தீவுக்குத் தானும் தன் கணவனும் வந்திருப்பதன் காரணத்தையும் கூறினாள். நினைத்தபடி எவரும் புட்டியை வாங்காததால் தன் கணவன் படும் துயரையும் எடுத்துரைத்தாள்.