உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 261

பெருமையாளர்கள்! மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப் பற்றும் கொண்ட நல் உரவோர்கள்!

தமிழகத்தில் பொதுவான அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள் பற்பலர் அவ்வப்போது தோன்றுகின்றனர்; பல அருஞ்செயல்களைக் கூடச் செய்கின்றனர்; செய்தும் வருகின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே தரத்தினர், அறிவுத் திறத்தினர் அல்லர். அவரவர்களுக்கு அவரவர்களுடைய வாழ்க்கைக்குத் தமிழ் ஒரு பிழைப்புக் கருவி. அவர்கள் தமிழைப் படித்தனர்; அல்லது கற்றனர்; அதில் புலமை பெற்றனர்; அல்லது ஆசிரியத் தன்மை பெற்றனர்; வாழ்வுற்றனர். ஆனால், பாவாணரைப் போலும், அப்பாத்துரையார் போலும் தமிழ் அறிஞர்களும் பெரும் கொள்கைப் புலவர்களும் எப்பொழுதோ ஒருமுறை, ஓரிரு கால கட்டத்திற்குள்தாம் பிறந்து தம்மால் தமிழையும் தமிழால் தம்மையும் மேம்படுத்தும் அரும்பெறல் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தமிழுக்கு ஆற்றிய அல்லது ஆற்றி வரும் தொண்டுக்குப் புலவர்கள் பிறர் அத்தனையரும் இணைந்து ஆற்றிய அல்லது ஆற்றிவரும் தொண்டும் ஈடாகாது என்று உறுதியாய் மெய்ப்பித்துக் காட்ட முடியும்.

அத்தகைய கொள்கைப் புலவோர்கள் தமிழுக்கு ஆற்றியது தான் - ஆற்றி வருவதுதான் தொண்டு-என்னும் பெருமை பெறக் கூடியது. புறநிலையில் அவர்போல் வைத்து எண்ணக் கூடிய புலவர்கள் பிறர் செய்வது பணி; தமிழ்ப் பணி! அல்லது ஆசிரியப் பணி; பேராசிரியப் பணி! எனவே தமிழும், தமிழினமும் தமிழ்நாடும் பாவாணர், அப்பாத்துரையார் போலும் தனிமுதல் பேராசிரியர்களால் - அவர்கள் வாழ்க்கையையே ஈடு வைத்து ஆற்றிய தொண்டால் - பெருமை யுற்றன; நிலைமை பெற்றன; சிறப்புப் பெற்று வருகின்றன.

இவர்களுள் பாவாணர் தமிழ்மொழி ஆய்வில் தனிக்குன்றம் எனச் சிறந்து விளங்கினார்.பன்மொழிப் புலவர் திராவிட மொழி ஆய்விலும் வரலாற்றிலும் தமிழையும் தமிழரையும் தமிழ் நாட்டையும் மேம்பாடு உறச் செய்தார். ஆனால் நம் நெடு வரலாற்று மூடக்கடைப்பிடியால் இருவரும் குன்றின் மேலிட்ட விளக்காக வாழாமல், குடத்துள் சுடர்ந்த விளக்குப் போல்