உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

239

3. உற்றிடத்துதவும் உணர்வு

மெய்யறிவு படைத்தவர்கள் கூட இடுக்கண் வந்த காலத் தில் உணர்விழந்து போவதுண்டு. மிகச் சிலரே அப்போதும் உய்த்துணர்வு தவறாதிருப்பர்.

பொருட் செல்வத்துடன் அறிவுச் செல்வமும் நிரம்பப் பெற்ற பெருந்தகை ஒருவர் இருந்தார் அவர் அஞ்சா நெஞ்சுடையவர் என்று பேர் வாங்கியிருந்தார். ஓராளுக்கு ஓராளாகத் தன்னை வந்து எதிர்க்கும் எவனுக்குந் தாம் அஞ்சுவதில்லை என்று அவர் அடிக்கடி கூறுவார்.

ஒருநாள் அவர் காட்டுவழியில் பெட்டி வண்டியேறிச் சென்று கொண்டிருந்தார். அப்போது சட்டென ஒரு திருடன் வண்டியை நிறுத்திப் பலகணி வழியாக அவர் மார்புமீது கைத்துப்பாக்கியை நீட்டிய வண்ணம், “எங்கே தனி மனிதனுக்கு அஞ்சாத நும் தறுகண்மை? இப்போது பணிந்து பணத்தைக் கொடுக்கிறீரா? உம்மைச்சுட்டுவிடட்டுமா?" என்று உறுக்கினான்.

செல்வர் அமைதி இழவாமல் பணப்பையை எடுப்பவர்

போல் சட்டைப் பையில் கையை இட்டுக்கொண்டே, “ஆம்; நான் சொல்லியதில் தவறொன்றுமில்லை. இப்போதும் நீ ஓராளாக வந்திருந்தால் யான் அஞ்சேன். உன்னுடன் அதோ உன் தோழனும் நிற்கின்றானே!” என்றார்.

“இஃதென்ன இந்த நல்ல நேரத்தில் நமது திருட்டில் பங்கு கொள்ளவந்த சனியன்!” என்றெண்ணித் திரும்பிப் பார்த்தான் திருடன். அந்த தறுவாய்க்கே காத்திருந்தார் செல்வர். பணப் பையை எடுப்பவர்போற் கையிட்டபோது, அவர் கையிற் பற்றியது பணப்பையை யன்று. மருந்து நிறைத்து முன்னெச்சரிக்கையாக வைத்திருந்த கைத்துப்பாக்கியைத்தான். திருடன் திரும்பியதும் அவர் அவனைச் சுட்டு வீழ்த்தினார்.

வலிமையால் அவரை வெல்ல எண்ணிய திருடன், அவர் அறிவுக்குத் தோற்று அழிவுற்றான்.