உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

19

அவர்கள் வியக்கத்தக் வண்ணம், கிளி உடனே தமிழ் மொழியிலே பேசிற்று.

“அம்மணி, என்னைக் கொல்ல வேண்டாம். இப்போதே அரசனிடம் கொண்டு கொடு. நல்ல விலை தருவார்” என்றது.

“என்ன விலை தருவார்?" என்று வேடன் மனைவி கேட்டாள். இதற்கு அது, மறுமொழி கூறிவிடும் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. அவள் உள்ளத்திலுள்ள எண்ணம் தான் சொல்லாக வந்தது. ஆனால், கிளியின் மறுமொழி இருவரையும் பின்னும் தூக்கிவாரிப்போட்டது.

“என் விலையை நானே கூறிக் கொள்கிறேன்” என்று அது இறுமாந்து கூறிற்று.

அந்தப் பச்சைக்கிளியை அன்றே வேடன், மன்னன் காயாம்பூவிடம் கொண்டு சென்றான்.

காயாம்பு அச்சமயம் புறாக்களுக்குத் தீனியிட்டுக் கொண்டிருந்தான். கிளியை அவன் ஏறிட்டுப் பார்த்தான். அதன் அழகில் அவன் சொக்கினான். “கிளி என்ன விலை?”

“பறவையே அதைச் சொல்லும்” என்றான் வேடன்.

"என்ன பறவை பேசுமா? ஓகோ, அது கிளிப்பிள்ளை தானே; நீங்கள் சொல்லி வைத்ததை அது சொல்லக்கூடும்! சரி, அதுவே சொல்லட்டும்!” என்றான்.

66

“அப்படிச் சொல்லாதீர்கள் அரசே! எனக்கு யாரும் எதுவும் சொல்லித்தர வேண்டியதில்லை. என் விலைக்கு ஏற்ப நாளை நடக்க வேண்டியது நானே! அந்த விலையின் மதிப்பும் எனக்குத்தான் தெரியும். ஆகவே, தயங்காமல் என் விலையாகப் பதினாயிரம் பொன் கொடுக்கக் கோருகிறேன்" என்றது கிளி.

“பதினாயிரம் பொன்னா? ஒரு கிளிக்கு இவ்வளவு பொன் யார் கொடுப்பார்கள்?"

66

'ஏதோ ஒரு கிளியல்ல நான்; அரசே! என் பெயர் கோக்கிளி. நான் உங்களுக்குப் புதுவாழ்வு அளிக்க வந்துள்ள புத்தேள். இதை நீங்கள் விரைவில் அறிய இருக்கிறீர்கள். ஆகவே, தயங்காமல் அந்த விலையை இந்த வேடனுக்குக் கொடுங்கள்” என்றது.