உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

அப்பாத்துரையம் - 35

பொய்ம்மையில் செல்வமாய் நீ இருக்கப்,

போய் எந்தச் செல்வம் அவாவிடுவேன்!”

என்று கல்லும் உருகப் பாடிக் கடவுளை வழிபட்டான். பசியும் சிறிது ஆறி, அப்பாழுங் கோயிலிலேயே துயின்றான்.

அவன் பாட்டு, அந்தக் கோயிலின் ஒருபுறத்தில் அறிதுயிலில் அமர்ந்திருந்த சித்தர் ஒருவரின் செவிகளைத் துளைத்தது. அது அவர் தூய உள்ளத்தைக் கனிவித்தது. அவர் மாயங்களில் வல்லவர். அவன் துயர் அகற்றத் திருவுளங்கொண்டு அவனருகே அவர், ஒரு கடவுட் கலத்தை வைத்து விட்டு, திருவுருவின்பின் மறைந்திருந்து உரக்கக் குரலெழுப்பினார்.

"அன்பனே, எம் வரம்பற்ற பெருஞ்செல்வம் அறிந்து நீ பாடினாய். உனக்கு வரையா நிறைகலமே அளித்தோம். அதை நீ கவிழ்த்தால் அது புதிய கட்டமுதாக ஒழுகிக் கொண்டே யிருக்கும். போதியமட்டும் உணவை அடைந்தபின், நீ அதை நிமிர்த்தால் போதும், கலம் வெறுங்கலமாய் விடும். இதை என் பரிசாகப் பெற்றுச் செல்” என்றார்.

குரல் கேட்டுச்செம்மொழி விழித்தெழுந்தான். யாரையும் காணவில்லை. ஆனால், அருகே கலம் இருந்தது. அம்மையப்பனை அவன் மீண்டும் நன்றியுடன் பாடினான். கலத்தை எடுத்துக் கொண்டு அவன் புறப்பட்டான்.

வீடு சேர நெடுந்தொலை இருந்தது. வழியில் அவனுக்குப் பசி உண்டாயிற்று. குளியாமல், கடவுள் வழிபாடாற்றாமல் அவன் உண்ண விரும்பவில்லை. ஆகவே, அருகிலுள்ள ஒரு விடுதியை அணுகினான். “ஐயனே! நான் குளத்தில் குளித்து விட்டு வருகிறேன். வரும்வரை இந்த உண்கலத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். வந்து பெற்றுக் கொள்கிறேன்” என்றான்.

விடுதிக்காரன் இணங்கினான்.

செம்மொழி, 'உண்கலத்’தின் அருமையை எண்ணி, மும்முறை அதைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்ளும்படி வற்புறுத்தினான்.