சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
155
அரசன் இக்கடுமுறையை விரும்பவில்லை. ஆயினும், வேண்டா வெறுப்பாக அதற்கு இணங்கினான்.
எத்தனையோ கட்டிளங்காளைகள் வந்துவந்து முயன்றனர். அவர்கள் உயிரிழந்ததுதான் மிச்சம். அட்லாண்டாவை எவராலும் ஓட்டத்தில் வெல்ல முடியாது என்ற எண்ணம் பரந்தது.
நாளடைவில் எவரும் போட்டிக்கு வருவதே அரிதாயிற்று. அட்லாண்டா இனி, கன்னியாகவேதான் காலங் கழிப்பாள் என்று பலரும் கருதி இருந்தனர்.
மிலானியின் என்பவன் ஒரு வேட்டுவ இளைஞன். அவன் வேடிக்கைப் பார்க்க ஷெணியஸின் நகருக்கு வந்திருந்தான். அன்றுதான் அட்லாண்டாவுடன் கடைசித் தடவையாக ஓர் இளைஞன் போட்டியிட்டான். மிலானியின் அப்போட்டியில் கண்ணும் கருத்துமாயிருந்தான். இளைஞன் போட்டியில் வென்றால்,போட்டியிட்ட அப்பெண்ணை மணந்து கொள்வான் என்று பிறர் கூறக் கேட்டான். இளைஞன் போட்டியில் வெல்வான் என்றே அவன் எண்ணினான்.
மிலானியின் எதிர்பாராதவகையில், அரசனும் பொது மக்களும் இளைஞன் பக்கமே ஆதரவு காட்டினர். ஒருவர்கூட அந்த அழகிய நங்கை வெல்ல வேண்டும் என்று விரும்பியதாகத் தெரியவில்லை. இது கண்டு அவன் வியந்தான். ஆனால், எல்லோரும் இளைஞனை ஊக்கியும், முதற் சுற்றிலேயே அந்தப் பெண்ணுடன் ஓட முடியாமல் அவன் சோர்வுற்றான். இரண்டாவது சுற்றுக்குள் பெண் ளைஞனைத் தாண்டி நெடுந்தொலை சென்று விட்டாள்.
இளைஞன் தோற்றுவிட்டான். எல்லார் முகத்திலும் ஊக்கக்கேடு மட்டுமல்லாமல், வருத்தமும் மேலிட்டது. இதற்கான காரணத்தையும் இளைஞன் உணரவில்லை.
ஆனால் கூட்டம் கலையவில்லை. பெரிய வாளுடன் ஒரு வீரன் வந்தான். இளைஞன் கைகால் கட்டுண்டு களத்தின் நடுவே நிறுத்தப்பட்டான்.