சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
157
ஓட்டம் விளையாட்டு, வேட்டை ஆகியவற்றுக்குரிய தெய்வம் அஃவ்ரோடைட் என்ற தேவி. மிலானியன் ஒரு மாத முழுவதும் ஒருநாள் கூட வீட்டில் தங்கவில்லை. ஒவ்வொரு நாளும் இறைவி அஃவ்ரோடைட்டுக்குரிய ஒவ்வொரு கோவிலிலும் சென்று வழிபாடாற்றினான். மாத முடிவும் அடுத்தது.
அர்கோலிஸ் என்ற இடத்தில் கடற்கரையையடுத்து இறைவியின் தலைக்கோயில் இருந்தது. இறைவிக்குப் பலியாகவும் நன்கொடையாகவும் தன்னால் வாங்கக்கூடிய பொருள்கள் அத்தனையும் அன்று அவன் வாங்கி வந்தான். அவற்றை அடுக்கி வைத்துக்கொண்டு அவன் இறைவியையே சிந்தித்து நின்றான்.
மாலையாயிற்று. மறுநாள் பந்தயத்துக்கான நாள்!
இறைவி அருள்பாலித்தால் போவது. இல்லாவிட்டால் அட்லாண்டாவுக்காக, அங்கே மாள்வதை இங்கே இறைவிக்காக மாள்வது என்று துணிவுடன் நின்றான். பலநாளாகக் காலுணவில் நோன்பிருந்து அன்று முழு நோன்பிருந்ததால், தலை சுழன்றது; கால்கள் தளர்ந்தன. ஆனால், அவன் அசையவில்லை, நின்ற நிலையிலேயே நின்றான்.
கதிரவன் கடலில் குளிக்கும் நேரம், அரையிருளைக் கிழித்துச் செந்நிற முகில் ஒன்று கோயிலை நோக்கி மிதந்து வந்தது. அதன் ஒளி தாளாமல் மிலானியன் கண்களை நிலத்தில் பதியும்படி தாழ்த்தினான்.
முகிலினின்று புறப்படுவது போல வெள்ளிமணி ஓசை போன்ற ஓர் ஒலி பிறந்தது.
66
உன்
ஆழ்ந்த
அன்பழைப்புக்கேட்டு இறைவி அஃவ்ரோடைட் உளங்கனிந்தாள்; உன் காரியம் கைகூடும். பலிபீடத்தருகே மூன்று பொற்பந்துகள் இருக்கக் காண்பாய். பந்தயத்தில் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அட்லாண்டாவின் முன், அவள் காலடியருகே, ஒன்றை உருட்டுக'.
இதைக் கேட்ட மிலானியன் இறைவியின் ஒளியுருவத்தின் கருணையைப் புகழ்ந்து விழுந்து வணங்கினான். பலிபீடத்தருகே உள்ள பொற் பந்துகள் கண்கண்ட இறைவியின் திருவருட் பேறுகளாக மிளிர்ந்தன.