22. பெர்ஸியஸ்
(கிரேக்க புராணக் கதைகளிடையே ஓர் அழகிய சிறு காவியம் பெர்ஸியஸ் கதை. அதே சமயம் பல காவியங்களின் கதைக் கூறுகளையும் காட்சிப் பின்னணிகளையும் அதில் காணலாம். கன்னியைச் சிறையடைக்க உதவும் கடல் சூழ்ந்த பித்தளைக் கோபுரம், தொட்டியில் கடலில் மிதக்கவிடப் படும் தாயும் சேயும் முதலியன இவற்றுட் சில)
ஆர்கஸ் நகரின் அரசன் அக்ரிசீனுக்குத் தானே என்ற ஒரு புதல்வி இருந்தாள். அவள் வளர வளர அவள் அழகும் வளர்ந்தது. ஆனால், அவள் தந்தை அவள் வளர்வது கண்டு மகிழ்வதற்கு மாறாகக் கவலை கொண்டான். ஏனென்றால், அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையே பாட்டனைக் கொன்று நாட்டைக் கைக்கொள்ளும் என்று வருபொருளுரைப்போன் ஒருவன் கூறியிருந்தான்.
அவளைக் கொன்றுவிடலாமென்று அவன் அடிக்கடி நினைப்பான். அதற்கு மனம் வரவில்லை. ஆகவே, அவள் பிள்ளையே பெறாமலிருக்கும்படியாக, அவளை ஆண்கள் கூட்டுறவிலிருந்து விலக்கி வைத்துவிட எண்ணினான். இவ் எண்ணத்துடன் அவள் பருவமடையு முன்பே அவன் கடற்கரை யடுத்து எவரும் அணுக முடியாத கொடும்பாறை ஒன்றின் மீது பித்தளையால் இழைத்த ஒருபெருங் கோபுரம் கட்டுவித்தான். அதன் கீழறைகள் ஒருசிறு வாயில்தவிர, வேறு பலகணியோ வாயில்களோ இல்லாமல் செய்யப்பட்டிருந்தன. கீழறைகள் நிறைய உணவுப்பொருள்கள் நிரப்பப்பட்டிருந்தன. மேல் தளத்தில் பெண்களுக்கு வேண்டிய எல்லாத் தனியறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.