(268
அப்பாத்துரையம் - 36
அன்பின் தன்மை அறியாத அண்ணன், இதில் தன் ஆவல் தீரவகை உண்டு என்பதை மட்டும் கண்டான். "இவ்வளவு செல்வத்தை நீ எப்படி எய்தினாய்? எனக்கு அது தெரிய வேண்டும்! என்று கேட்டான்." கள்ளமும் கபடும் அற்ற தம்பி தன் கதை முழுதும் கூறினான். அத்துடன், “நீ மட்டும் இவ்வளவு பாடுபட்டு உழைப்பானேன், அண்ணா! என்னைப் பின்பற்றி நீங்களும் கல் அரிமாவிடம் சென்று வேண்டிய பணம் று பெறலாம்," என்றான்.
பாம்புக் குஞ்சுக்கு நீந்தப் பழக்கியா தரவேண்டும்? தம்பி சொல்வதற்கு முன்பே அண்ணன் உள்ளம் அந்த எண்ணச் சுழலிலேயே சுழன்றது. கதையின் பிற்பகுதியைக் கேட்க அவனுக்குப் பொறுமையில்லை. கீழே ஒரு பொன்கூட விழாமல் முன்னெச்சரிக்கையுடன் இருந்து, "போதும்” என்று சொல்லிவிட வேண்டும் என்று தம்பி வற்புறுத்தியைதையும், அவன் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
அவன் விரைந்து தம்பியிடம் விடைபெற்றுக் கொண்டு மனைவியுடன் சென்றான். மனைவியை வீட்டில் கொண்டு போய் விட்டதுதான் தாமதம். அவன் புறப்பட்டுவிட்டான்! நகருக்குச் சென்று பெரிய மரத்தொட்டிக்காகக் கடைத்தெரு முழுதும் அலைந்தான்.
அவன் விரும்பிய அளவு பெரிய மரத்தொட்டி எங்கும் அகப்படவே யில்லை. யில்லை. ஆனால், கடைகளில் இருந்த தொட்டிகளில் மிகப் பெரியதான ஒன்றை அவன் வாங்கினான். அதுகூட அவனால் எளிதில் தூக்கமுடியாத அவ்வளவு பெரிதாயிருந்தது. பணப் பேரவாவால் இதுவரை தூக்கியறியாத அவ்வளவு பளுவுடைய அத் தொட்டியைச் சுமந்து கொண்டு, அவன் மலையேறிச் சென்றான்.
தம்பியைப் போலவே அவன் தான் கொண்டு வந்திருந்த மெழுகுத்திரி விளக்குகளை இருபுறமும் ஏற்றிவைத்தான். பின் உரத்த குரலில் அரிமாவுக்கு வணக்கம் தெரிவித்தான். அவன் குரலில் பணிவு இல்லை. உள்ளத்தில் வணக்க உணர்ச்சி இல்லை. பணப் பேரவா ஒன்றுக்கே அதில் இடமிருந்தது.