உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

273

கேட்டவாறே அவள் தன் பெட்டியைத் திறந்து நாகனுக்குத் தான் சேமித்துவைத்த உணவுப் பண்டங்களைக் கொடுப்பாள்.நாகனும் தலையை உயர்த்தி எல்லாவற்றையும் தின்றுவிட்டு, “அக்கா மாரி, அக்கா மாரி! உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்கும். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின்தான் இரவில்கூட மாரிகிதா தூங்குவாள்.

மாரிகிதா அவளுக்குக் கொடுத்த உணவுப் பண்டங்கள் யாவற்றையும் விரைந்து தின்னாமல் மீதி வைக்கப் பார்ப்பதையும், அடிக்கடி தனிமை நாடியதையும் அவள் தந்தை கவனித்தார். அவள் தனிமையில் என்ன செய்கிறாள் என்பதை வேலையாட்கள் மூலம் அவர் ஆராய முற்பட்டார். நாகன் இதற்குள் பெரிய பாம்பாக வளர்ந்துவிட்டதனால் வேலையாட்கள் அதைக்கண்டு அஞ்சி, தந்தையிடம் கூறினார்கள். அவர் உடனே பாம்பைக் கைப்பற்றி அதைக் காட்டில் கொண்டு சென்று கொன்றும் விடும்படி தன் ஆட்களுக்கு ஆணையிட்டார்.

தம்பி நாகன் உயிர்போனால் என் உயிரும் போய்விடும் என்று கூவினாள் மாரிகிதா. அதன் பேரில் தந்தை, “சரி, அவளுக்காக அதைக் கொல்லாமலே காட்டில் விட்டு விடுங்கள்,” என்றார்.

நாகன் போகுமுன் மாரிகிதாவிடம் தேறுதல் மொழிகள் சொல்லிற்று. “அக்கா மாரி, அக்கா மாரி! நான் பிழைத்திருக்கும் மட்டும் உன்னை மறக்க மாட்டேன். ஆனால், நீ என்னை மறந்துவிடாமலிருக்க நான் ஒரு ஏற்பாடு செய்துவைத் திருக்கிறேன்.

இன்று முதல் நீ சிரிக்கும் பொழுதெல்லாம் முத்துமணிக் கற்கள் உதிரும்; நீ சீவி முடிக்கும்போதெல்லாம் உதிர்கிற தலைமுடிகள் மறு நாளைக்குள் பொன் கம்பிகளாகும்; நீ கை கழுவும் நீரெல்லாம் ஒரு நாளைக்குள் வெள்ளிப் பாளமாகும்; இவற்றைக் கண்டதும் நீ என்னை நினைத்துக் கொள்,” என்றது.

அவள் பாம்பின் சொற்களை அவ்வளவாக நம்பவில்லை. ஆனால், அதைக் காட்டில் விட்டுவிட்டு வந்த ஒருவன் அதை மெய்ப்பிக்க நேர்ந்தது.