உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

125

வந்தாள். தற்செயலாக லைஸாண்டர் விழித்தபோது அவளைப் பார்க்க நேர்ந்தது. மாய மலரின் ஆற்றலால் உடனே அவன் ஹொமியாவின் காதலை மறந்து ஹெலனாவைக் காதலித்தான்.

ஓபிரான் பக்கினிடம் மாய மலரை அனுப்பியபோது காதலில்லாத ஓரிடத்துக் காதலை உண்டுபண்ணவே விரும்பினான். ஆனால், நடந்தது இதற்கு நேர்மாறாய் விட்டது. காதலிருந்த இடத்தில் அதனை அகற்றி, இருந்த குழப்பத்தை இன்னும் மிகுதியாக்கிற்று அது. ஹெலனா முதலிலேயே தெமத்ரியஸை பின்பற்றிச் செல்ல முயன்று, பின்பற்ற முடியாமல் பின்னடைந்து தனியே வந்துகொண்டிருந்தாள். அதற்கிடையில் இப்பொழுது அவளுக்கு லைஸாண்டர் காதலிப்பது இயற்கை அன்றாகலின் அவன் அவளைக் கேலி செய்வதாகவே அவள் நினைத்தாள். 'எல்லாருடைய ஏளனத்திற்கும் ஆளாக நான் ஏன் பிறந்தேன்? தெமத்ரியஸிக் வெறுப்பால் நான் புண்பட்டிருப்பது போதாதா? நீரும் சேர்ந்து வேறு என்னை அவமதிக்க வேண்டுமா? நான் உம்மை நல்ல உள்ளம் உடையவர் என்றன்றோ நினைத்திருந்தேன்! நீர் என்னிடம் இப்படிக் கொடுமை காட்டலாமா? என்று அவள் சினந்து கூறிக்கொண்டு சென்றாள். அவள் கடுமொழிகளைத் தாங்கிக்கொண்டு லைஸாண்டர் அவளையே விடாமற் பின்பற்றினான்.

ஹெர்மியா விழித்தெழுந்தபோது

லைஸாண்டர் அங்கில்லை. தனியே இருப்பதில் அவளுக்கும் அச்சம் ஏற்பட்டது. லைஸாண்டருக்கு என்ன நேர்ந்ததோ என்ற கவலையும் உண்டாயிற்று. அவனைத் தேடித் தேடி அவள் காடெங்கும் அலைந்தாள். இதற்கிடையில் ஹெலனாவை வெறுத்துத் தள்ளிவிட்டு முன்சென்ற தெமத்ரியஸ் காட்டில் இன்னொருபுறம் தூங்குவதை ஓபிரான் கண்டான். தெமத்ரியஸ் என்று நினைத்துக் கொண்டு பக் உண்மையில் லைஸாண்டர் கண்களிலேயே மாயச்சாற்றைப் பிழிந்துவிட்டான் என்பதை ஓபிரான் கண்டு கொண்டான். இப்போது தாம் குறிப்பிட்ட இளைஞனையே நேரில் பார்த்தாயிற்று. எனவே,அவன் கண்களில் அப்பொழுதே மாயச்சாற்றைப் பிழிந்தான். சற்று நேரம் சென்றபின் அவ்வழியே லைஸாண்டரும் ஹெலனாவும் வந்தனர். அவர்கள் ஓசைகேட்டு விழித்த தெமத்ரியஸ் முதன் முதலாக ஹெலனாவைக் கண்டான்.