சேக்சுபியர் கதைகள் - 2
1. ஒதெல்லோவின் காதல்
169
இத்தாலி நாட்டின் சிறந்த நகரங்களுள் 2வெனிஸ் ஒன்று. அதன் நகரவை உறுப்பினருள் 'பிரபான்ஸியோ என்ற செல்வர் ஒருவர் இருந்தார். அவருடைய புதல்வி எல்லா வகையான நற்குண நற்செய்கைகளும் பொருந்திய டெஸ்டிமோனா ஆவள். அவளை அடையும் விருப்பத்துடன் பல நாட்டிலிருந்து செல்வக் குமரர் பலர் வந்து வந்து, தம் விருப்பம் ஈடேறாது ஏமாந்து போயினர். புற அழகே போன்ற அக அழகும்மிக்க இவ்வரிய நங்கை அவர்களது புற அழகில் மயங்காது அகஅழகே அழகென நாடி நின்றாள். அதனால் பிறர் எதிர்பாரா வகையில் அவள் தன் நாட்டினர் அனைவரையும் விடுத்து மூர் என்ற கருநிறமுடைய வகுப்பைச் சார்ந்த ஓதெல்லோ என்பவனுக்கே தனது காதலை உரிமைப்படுத்தினாள்.
டெஸ்டிமோனாவின் காதலுக்கு உண்மையில் ஓதெல்லோ தகுதியுடையவன் என்பதில் ஐயமில்லை. அவன் உடல் நிறம் கருப்பாயினும், உள்ள உயர்வு எத்தகைய உயரிய பண்புடைய செல்வ நங்கையும் பாராட்டத்தக்க தன்மையுடையதாகவே இருந்தது. அவன் ஒரு சிறந்த போர்வீரன்; போரில் அஞ்சா நெஞ்சமுடையவன்; வீரம் ஒன்றின் மூலமாகவே போரில் சிறைப் படுத்தப்பட்ட ஓர் அடிமையின் நிலையினின்று படிப்படியாக உயர்ந்து வெனிஸ் படையின் தலைவனானான். நகராண்மை மன்றத்தின் பகைவர்களாகிய துருக்கியரை அடக்கி ஒடுக்கி அதனைக் காத்தவன் அவனே. நகராண்மைக் கழகத்தார் அவனை மிகவும் நன்கு மதித்திருந்தனர். அதோடு டெஸ்டிமோனாவின் தந்தையும் அவனிடம் மிகுந்த நட்புக்கொண்டு தம் வீட்டிற்கு அவனை அடிக்கடி அழைத்து அவனுடன் விருந்துண்டு மகிழ்வார்.
ஒதெல்லோ பல நாடுகளையும் சுற்றிப் பார்த்தவன். டெஸ்டிமோனாவிற்குப் பெண்களின் இயற்கைப்படி அவனுடைய பலவகையான வாழ்க்கைச் செய்திகளையுங் கேட்பதில் ஆர்வம் மிகுதி. அவனும் அதற்கேற்பத் தான் ஈடுபட்டிருந்த போர்கள், முற்றுகைகள், படையெடுப்புகள்; நிலத்திலும் நீரிலும் தனக்கு நிகழ்ந்த இடையூறுகள்; பீரங்கி முனைகளிலும் கோட்டை மதிற் பிளவுகளிடையே இருதிறத்துப்