உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(174) ||

அப்பாத்துரையம் – 37

இவன் வீரமும், நேரிய தோற்றமும் உடையவன். பெண்களிடம் நாகரிகமாகவும் நயமாகவும் நடந்துகொள்ளும் இயல்பினன். ஒதெல்லோ டெஸ்டிமோனாவின் காதலை நாடி நின்ற சமயம் அவனது திறனைப் பயன்படுத்தி, அவனைத் தன் காதல் தூதனாக்கிக் கொண்டான். கள்ளங் கபடற்ற மனமும் சிறுமையான நினைவுகளுக்கு இடந்தராப் பெருந்தகைமையு முடைய ஓதெல்லோ அவனிடம் பற்றும் நம்பிக்கையும் வைத்திருந்தது இயல்பே. டெஸ்டிமோனாவும் தான் காதலித்த கணவன் நீங்கலாக, வேறெவரையும் விட அவனிடம் நம்பிக்கையும் நல்லெண்ணமும் உடையவளாகவே இருந்தாள். மணவினைக்கு முன் இருந்த இந்த நட்புறவு மணவினைக்குப் பின்னும் அவனுடன் இருவருக்கும் இருந்து வந்தது, யாதொரு தங்கு தடையுமின்றிச் சூதற்ற நிலையில் ஓதெல்லோ இருக்கும் போதும் சரி; இல்லாதபோதும் சரி; மைக்கேல் காசியோவும் டெஸ்டிமோனாவும் நகைத்து உரையாடியும் களித்தும் நேரம் போக்குவதுண்டு. இந்நட்பின் குற்றமற்ற தன்மையும் உயர்வுமே தீயோன் ஒருவன் எறிந்த தீக்கணைக்கு அதனை எளிதில் இரையாகச் செய்தல் என்னல் வேண்டும்.

ஸைப்பிரஸ்க்கு வருவதற்குச் சற்று முன்னதாகவே ஓதெல்லோ காசியோவுக்குத் தனக்கடுத்ததோர் உயர்பணி தந்தான். காசியோவை விட முதலில் உயர்ந்த நிலையில் இருந்து இவ்வுயர்வால் அவனுக்குக் கீழ்ப்பட்டுவிட்டஅயாகோ என்னும் படைஞனுக்கு இவ்வுயர்வு கண்ணுறுத்தலா யிருந்தது. அயாகோ பார்வையில் காசியோ அதற்கு எவ்வகையிலும் தகுதியுடைய வனாகப் படவில்லை. 'பெண்களிடையே பசப்பித் திரிவதற்குத் தானே இவன் தகுதியுடையவன்? இவனுக்குப் போரைப் பற்றி என்ன தெரியும்?' என அவன் கூறுவதுண்டு.இதுமுதல் அவனுக்குக் 'காசியோ’வின் பெயர் நஞ்சாயிற்று. காசியோவுக்கு உயர்வு தந்ததாலோ அல்லது வேறெவ்வகை நினைவாலோ ஒதெல்லோவின் பேரிலும் எல்லை இல்லாக் கசப்பும் வயிற்றெரிச்சலும் ஏற்பட்டு நாளாக நாளாக வேரூன்றித் தழைத்து வளர்ந்து வந்தது. சமயம் ஏற்பட்ட போதெல்லாம் அவன் உள்ளதும் இல்லதும் ஆக ஒதெல்லோ காசியோ இவர்களைப் பற்றிய தீய கருத்துக்களைப் போற்றிப் பெரிதாக்கிப் பொறாமைத் தீயை வளர்த்து வந்தான்.