198 ||
அப்பாத்துரையம் - 37
அக்காதலைத் தாங்குதல், அதற்குத் தகுதியுடையவளாதல், கூடியதன்று.வானின்று பொழியும் மழை, அவர் காதற் கண்ணீர்ப் பெருக்கிற்கு இணையன்று; கடலின் இரைச்சல், அவரது நெஞ்சகத்து ஏற்படும் பேராரவாரத்தினுக்கு ஈடன்று; அவரது பேருயிர்ப்பு, வடவைத் தீயினும் வெம்மையானது.
ஒலிவியா: இத்தகைய கவிதைகளாற் பயனென்ன? உம்முடைய தலைவருக்கு எனது முடிவைத்தான் நான் தெரிவித்துவிட்டேன். அவரிடம் எனக்குக் காதலில்லை. அவர் நற்குணம் உடையவர்; பெருந்தன்மையுடையவர்; தூய இளமைநலம் உடையவர். ஆயினும் அவரிடம் என் மனம் செல்லவில்லை. அவர் வீரர் என்றும், அறிஞர் என்றும், அன்புடையவர் என்றும் நாற்புறத்தாரும் புகழும் புகழை நான் கேளாமலில்லை. ஆனால், என் மனம் அவரை நாடவில்லை! இந்த ஒரே முடிவை நான் இன்னும் எத்தனை தடவை
சொல்லவேண்டும்?
வயோலா: நீ எத்தனை தடவைதான் சொல்லேன்! அதனை அவர் ஏற்கமாட்டார். அவர் உன்னிடங் கொண்ட காதலை என் போன்ற எளியோர் கொண்டால், உன் வாயிலில் வேங்கையாய் நிற்பரேயன்றிப் போகமாட்டார் காற்றில் இலைகள் ஆடுந்தோறும் வேங்கைமரம் அகவுவது போல உன் பெயரையே கூறிக்கொண்டிருப்பார். காதற் பாட்டுக்கள் வரைந்து பாடுவர்; காற்றும், மரமும், குன்றும், மேடும் ஒலிவியா, ஒலிவியா என்று ஒன்றுபோலக் கத்தும்படி செய்வர். ஐம்பெரும் பூதங்களுங் கூடி உன்னைத் தம்மீது இரங்கவைக்கும்படி செய்வர்.
ஒலிவியா: நும் போன்றவர் பலவும் செய்யக்கூடியவரே; உமது குடியாதோ?
வயோலா: என் குடி நற்குடியே; நீ காணும் நிலையினும் உயரியதே; நான் ஒரு நன்மகன்.
ஒலிவியா: அப்படியா, நல்லது; உம் தலைவரிடம் போய் என் முடிவை வழுவறக் கூறி, 'அவள் உம்மைக் காதலிக்க மாட்டாள்' என்று தெரிவித்துவிடும். 'இனி இப்பக்கம் ஆள் அனுப்ப வேண்டா' என்றும் உறுதியாய்க் கூறிவிடும்... ஆயினும் நீர்-நீர் இன்னொரு தடவை வந்து, வேண்டுமானால் அவர் நிலைமையை அறிவிக்கலாம்.