சேக்சுபியர் கதைகள் - 2
203
66
5. கலங்கிய நீர்
அச்சமயம் எங்கிருந்தோ ஒரு வீரன் வந்து அவளுக்குத் துணையாக நின்று ஸர் ஆண்ட்ரூவைத் துரத்தினான்.வயோலா, எதிர்பாராத வகையில் இறைவன் அருளே வந்ததுபோல் வந்த அவனுக்கு நன்றி கூறினாள். ஆனால், அங்ஙனம் கூறி முடிப்பதற்குள் அரசன் ஆட்கள் அவனைப் பிடித்துக்கொண்டு, என்ன ஓடப் பார்க்கிறாய்; இத்தனை நாள் தப்பித் திரிந்தவன் இன்று அகப்பட்டாயா?" என்று கட்டிக்கொண்டு போகத் தொடங்கினர். அப்போது அவன் வயோலாவை நன்கறிந்தவன் போல அவளை நோக்கி, "இவ்வளவு தொல்லையும் உன் பொருட்டாக ஏற்பட்டதே சரி, இனிச் செய்ய வேண்டியதைப் பார்ப்போம். நான் திரும்பி வாங்கும் எண்ணமில்லாமலேயே உனக்கெனக் கொடுத்த பணப்பையை இப்போது என் நிலைமையில் கேட்கவேண்டியவனாய் இருக்கிறேன். அருள்கூர்ந்து அதனைத் தந்துதவுவாய்” என்றான்.
வயோலா அவனை முன்பின் தெரியாதவளானபடியால், ஒன்றுந் தோன்றாது விழித்தாள். அவன் செய்த உதவிக்கு நன்றியுடையவளாயினும், அவனையோ அவன் பணப்பையையோ தான் அறிந்தவள் அல்லளென அவள் மறுத்தாள். அவன் அதுகேட்டு வெகுளி நகைநகைத்துக் காவலரைப் பார்த்து, அவளைச் சுட்டிக்காட்டி, "ஆ, உலகம் இருந்தவாறு காணுங்கள். இதோ இச்சிறுவனை இறப்பிலிருந்து மீட்டவன் நான். போதாக் குறைக்குப் பிள்ளை போல் நடத்தி என் பணப்பையை உரிமையுடன் அவனுக்குக் கொடுத்தேன். அவனுக்கு என்ன நேர்ந்ததோ என்ற பாழும் கவலையினாலே உயிரையும் பொருட்படுத்தாது இந்நகர் வந்து உங்கள் கையில் சிக்கினேன். இத்தகைய நன்றியின்மையைப் பார்த்தபிறகு எனக்குச் சிறையைப் பற்றியோ தூக்கைப் பற்றியோ கூடக் கவலையில்லை. இத்தகைய பொய்ம்மை வாழும் உலகிலிருந்து விடுபட வேண்டியதே” என்று வெறுத்துப் பேசினான். கடைசியாக அவன் காவலருடன் செல்கையில் அவள் பக்கமாகப் பார்த்து, "நன்றி கெட்ட ஸெபாஸ்தியன்! என்னை விற்று நீயாவது நன்மை அடைக” என்று கூறிவிட்டுச் சென்றான்.
""