உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

43

பட்டத்துக்குரிய மைந்தர் இருவரும் அஞ்சி ஓடவே, மாக்பெத் எதிர்ப்பாரின்றி முடி சூடினான்; மாயக்காரிகள் வாக்கு மெய்யானது கண்டு மகிழ்ந்தான்.

3. பாங்கோவின் ஆவி அலைத்தல்

மாக்பெத் ஸ்காட்லாந்து மன்னன் ஆவான் என்பதைத் தெரிவித்த மாயக்காரிகள் பாங்கோவுக்கு வருபொருள் ஒன்று உரைத்திருந்தார்கள்; அவனுடைய மக்கள் ஸ்காட்லாந்து அரசுரிமையைப் பெறப்போவதையும் அறிவித்திருந்தார்கள். அரசனைக் கொன்று அரசுரிமை பெற்ற மாக்பெத்தும், அவன் மனைவியும் இதனை மறக்கவில்லை. “நாம் அரசுரிமை பெற்றும் பயன் இல்லையே! நமக்குப்பின் நம்முடைய மக்கள் அவ்வுரிமை பெறுதல் இயலாது அன்றோ? பாங்கோவின் மக்கள் அரசுரிமை பெறுவார்கள் என்று மாயக்காரிகள் கூறினார்களே! அவர்கள் வாக்குப் பொய்க்காதே வேறொருவனுடைய மக்கள் சிறப்படை வதற்கோ நாம் அரும்பாடுபட்டு அரசனைக் கொன்று ஆட்சியைப் பெற்றோம்? அவ்வாறு ஆகாதாவாறு நாம் தடுத்தல் வேண்டும். அதற்கு வழி என்ன? வல்லமை மிகுந்த அரசனையே ஒழித்துவிட்ட நமக்கு, இந்த இடையூறு ஒன்றை ஒழித்துவிட முடியாதோ? இஃது எளிய செயலே; பாங்கோவையும் அவனுடைய மகனையும் கொன்றுவிடுதல் வேண்டும். மாயக்காரிகள் வாக்கு நமக்குப் பலித்தது. ஆனால், அவனுக்குப் பலிக்காதவாறு நாம் தடுத்தல் வேண்டும்" என்று பலவாறு எண்ணிக் கொண்டிருந் தார்கள்.

அவர்கள் இக் கொடிய எண்ணத்தை விரைவில் முடித்துக் கொள்ளத் துணிந்தார்கள். ஒரு பெரிய விருந்து ஒன்று ஏற்படுத்தினார்கள். அவ்விருந்துக்குத் தலைவர்கள் பலரையும் வருமாறு அழைத்தார்கள்; பாங்கோவையும் அவன் மகனையும் மிக்க அன்போடு வரவேற்பது போல் நடித்தார்கள்; அவ்விருந்து இரவில் நடைபெறுமாறு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பாங்கோவும் அவன் மகனும் அரண்மனைக்கு வரும்வழியில் அவர்களைக் குத்திக் கொல்லுமாறு கொலைஞர் ஏவப் பட்டிருந்தனர். முதலில் பாங்கோ வர, அவன் கொல்லப்பட்டான். அக் கொலையால் எழுந்த ஒலியைக் கேட்டதும், பாங்கோவின் மகன் ப்ளீன்ஸ் என்பவன் விரைந்தோடி மறைந்துவிட்டான்.