உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

223

தன்னுணர்வு எப்போது வந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. இரவின் பனியையும் பகலின் வெயிலையும் அவர்கள் அறியவில்லை. யாரும் வந்து அவர்களுக்கு உதவவுமில்லை. அவர்கள் அப்படியே பசியாலும் வெப்பத்தாலும் இறந்தே போயிருக்கக் கூடும். ஆனால் ஓர் ஆண்டி அவர்கள் நிலை கண்டு அவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவி செய்தான். அவன் ஊட்டி அவர்கள் உண்டனர். கம்பு கோல்களின் உதவியால் பந்தர் செய்து அவனே அவர்களுக்கு வெயிலிலிருந்து பாதுகாப்பு உண்டு பண்ணினான். அதன்மீது ஒரு போர்வை கூரையாக விரிக்கப் பட்டது. அவனே பச்சிலையும் எண்ணெயுமிட்டுக் காயங்களை ஆற்றுவித்தான்.

இரண்டுநாட்களில் பட்டி மந்திரி எழுந்து நடக்க முடிந்தது. அவன் உதவியால் பாரத வீரனும் பின்னும் இரண்டு நாளில் முன்னேற்றம் அடைந்தான். கழுதைக்கும் கோவேறு கழுதைக்கும் பக்கத்தில் நிறையப் புல்லும் புதரும் நீரும் கிடைத்தன. இந்த நாலைந்து நாட்களும் அவற்றிற்கு நல்ல ஓய்வாய் அமைந்தன.

அவர்களை அடித்த ஆயர்களில் சிலர் அவர்களை அந்நிலையிலேயே மீண்டும் வந்து கண்டார்கள். ஆயர்கள் அவர்களால் அடைந்த நட்டமும் அழிவும் பெரிது. ஆயினும் அவர்கள் இதற்குள் தம் கோபத்தை மறந்து விட்டார்கள். அவர்கள் உடல்நிலை கண்டு இரக்கமுற்றார்கள். அத்துடன் பாரத வீரன் உண்மையில் கொடியவனல்ல! அறிவு திரிவுற்ற கோமாளி என்று அவர்கள் இப்போது தெரிந்தனர். அவர்கள் இரக்கமும் கனிவும் இன்னும் மிகுதியாயிற்று. அவர்கள் பாலும் தயிரும் உணவும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

பாரத வீரன் இன்னும் அவர்களை மாயக் கரதூஷணரின் ஒற்றர்களாகவே கருதினான். அவர்கள் தந்ததைத் தொட மறுத்தான். ஆனால் பட்டி மந்திரி மனமார யாவும் உண்டான். அவனிடமிருந்த உணவு இதனால் முற்றிலும் மீந்தது. அதையே முழுதும் பாரத வீரனுக்குக் கொடுத்தான். பாரத வீரனின் விசித்திரப் போக்கு ஆயர்களுக்குப் பின்னும் அவன் மீது பாசத்தையும் ஆர்வத்தையும் பெருக்கவே உதவின. அவர்கள் பாரத வீரனறியாமல் பட்டி மந்திரி மூலம் அவனுக்குப் பலவகை உதவிகள் செய்தனர்.